×

கட்சி அமைப்பில் ஒத்துழைப்பு இல்லை ஹரிஸ் ராவத்தை போல் நானும் அதிருப்தியில் தான் இருக்கிறேன்: உத்தரகாண்ட் காங். தலைவர் கணேஷ் கடியாலும் போர்க்கொடி

டேராடூன்: கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோற்றதில் இருந்தே, காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகமாகி விட்டது. பல மூத்த தலைவர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள் கட்சியில் இருந்து தொடர்ந்து வெளியேறி, பாஜ.வில் இணைந்து வருகின்றனர். பஞ்சாப்பில் சில மாதங்களுக்கு முன் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பதவி விலகி, புதிய கட்சியை தொடங்கி உள்ளார். ஜம்மு காஷ்மீரில் புதிய கட்சியை தொடங்குவதற்கான மறைமுக வேலைகளில் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள உத்தரகாண்ட் மாநில காங்கிரசிலும் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாநில முன்னாள் முதல்வரும், தேர்தல் பிரசார குழுவின் தலைவருமான ஹரிஷ் ராவத், ‘கட்சியில் தனக்கு யாரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கட்சி தலைமையும் அதை கண்டு கொள்ளவில்லை,’ என்று நேற்று முன்தினம் வெளிப்படையாக டிவிட்டர் பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பரபரப்பு அடங்கும் முன்பாக, இம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரான கணேஷ் கடியாலும் கட்சி அமைப்பின் மீது அதிருப்தியை தெரிவித்து புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘கட்சி அமைப்பில் ஒத்துழைப்பு இல்லை என்ற அதிருப்தி எண்ணம், ராவத்தை போல் எனக்கும் இருக்கிறது.  இது இன்றல்ல, கடந்த சில காலமாகவே இருக்கிறது. ஆனால், இது கட்சியின் அமைப்பு சமபந்தப்பட்ட பிரச்னை என்பதால், இதற்கு ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் என கருதுகிறேன். உத்தரகாண்ட் மாநிலத்தின் மிகப்பெரிய தலைவர் ஹரிஷ் ராவத். அவரை அதிருப்தி அடைய விடக் கூடாது. ராவத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க  கூடிய சாதகமான நிலையில் கட்சி உளளது,’’ என்றார்.

Tags : Haris Raavam ,Utterakand Kong ,Ganesh Kadi , Party, Cooperation, Haris Rawat, Uttarakhand,
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...