×

அயோத்தியில் நிலம் வாங்கிய பாஜ.,வினர் விசாரணைக்கு யோகி உத்தரவு

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் சுற்றுப்பகுதிகளில் நிலங்களை அடாவடியாக பாஜ.வினர் வாங்கி குவித்தது பற்றி விசாரணை நடத்தும்படி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜ முயன்று வருகிறது. இந்நிலையில், பாஜ மீது எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் பகுதியை சுற்றியுள்ள இடங்களில் நிலத்தின் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இங்கு கோயிலை கட்டுவதற்கான அனுமதியை கடந்த 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்தது.  இதைத் தொடர்ந்து, கோயில் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

இந்நிலையில், ராமர் கோயில் அமையும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாஜ. தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள். உயரதிகாரிகள் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி நிலங்களை வாங்கி குவித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள்,  சாமான்ய மக்களிடம் மிரட்டி நிலங்கள் அபகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், ராமர் கோயில் அறக்கட்டளை மூலமாக வாங்கப்பட்ட நிலங்களும், சட்ட விரோதமாக கை மாற்றப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. பாஜ.வினரின் இந்த செயலுக்கு  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பதிவில், ‘இந்து உண்மையின் பாதையில் செல்கிறது. இந்துத்துவா மதத்தின் பெயரால் கொள்ளை அடிக்கிறது,’ என விமர்சித்தார்.

இந்நிலையில், இந்த நில மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும்படி இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக உத்தர பிரதேச கூடுதல் செயலாாளர் நவ்நீத் சேகல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் துறையின் மூலம் விரிவான விசாரணை நடத்தும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்,’ என்று கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அயோத்தி நில மோசடி தொடர்பாக அதிகாரிகள் மட்டத்திலான விசாரணைக்கு உத்தர பிரதேச முதல்வர் உத்தரவிட்டு இருப்பது வெறும் கண்துடைப்பு நாடகம். ராமர் கோயிலை கட்டும்படி உச்ச நீதிமன்றம்தான் உத்தரவிட்டது. எனவே, உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து தலையிட்டு, விசாரணை மேற்கொள்ள வேண்டும். மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தி, பாஜ.வினர் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்,’’ என்றார்.

Tags : Yogi ,BJP ,Ayodhya , Ayodhya, Land, BJP, Inquiry,
× RELATED ஒரு ஓட்டு நாட்டின் தலைவிதியை மாற்றும்: உ.பி முதல்வர் யோகி சொல்கிறார்