×

நாடு முழுவதும் ஒரே நாளில் 80 பேருக்கு தொற்று ஒமிக்ரான் பாதிப்பு 300 ஆக உயர்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே நாளில் 80 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பரவியதால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. வெளிநாடுகளில் வேகமாக பரவி வந்த ஒமிக்ரான் இந்தியாவில் நுழைந்தது. இதனால் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு திரும்பிய பயணிகளுக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒமிக்ரான் பாதிப்பு வேகமெடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று 23 பேர் ஒமிக்ரானுக்கு பாதிக்கப்பட்டனர். இதனால் அம்மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சேர்த்து நேற்று ஒரே நாளில் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கிடையே மாநிலங்களில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பை கண்டறிய மாநிலத்தில் நாள்தோறும் 3 லட்சம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்திலும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களிலும், கட்டுப்பாட்டு பகுதிகளிலும் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறைந்தளவு தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் கொரோனா அதிகரித்துள்ள மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்ப ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

தடுப்பூசி கொள்முதல் ரூ.19,675 கோடி செலவு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ‘மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வினியோகிக்க, ரூ.19,675 கோடிக்கு கொரோனா தடுப்பூசி 2020 டிசம்பர் வரை கொள்முதல் செய்யப்பட்டது. 2021-22 ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி கொரோனா தடுப்பூசிக்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. கோவின் போர்ட்டல் தரவுகளின் படி, தடுப்பூசி செலுத்த தொடங்கிய கடந்தாண்டு ஜனவரி 16ம் தேதி முதல், இப்போது வரையில் நாடு முழுக்க 140 கோடி ேடாஸ்கள் போடப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

இதுவே கடைசியாக இருக்கலாம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘கொரோனா வைரசின் கடைசி உருமாற்ற வைரசாக ஒமிக்ரான் இல்லாமல் போகலாம். ஆனால், ஆபத்தான கடைசி உருமாற்ற வைரசாக இது இருக்கக் கூடும். சிலவகை வைரஸ்கள் நமது உடலில் நுழைந்து நடுநிலையாக மாறி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒமிக்ரானும் அதுபோன்ற ஒன்றுதான் என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது,’ என தெரிவித்தனர்.

சீனாவில் ஊரடங்கு
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இது டெல்டாவா, ஒமிக்ரானா என்று கண்டறியாத நிலையில், வடமேற்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஜியான் நகரத்தில் ஒரு கோடியே 30 லட்சம் மக்களை வீடுகளிலேயே இருக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் தங்கியுள்ளவர்கள் அறையை விட்டு வெளியேற முடியாது. 2 நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க அனுமதிக்க அரசு அனுமதித்துள்ளது. சீனாவில் இதுவரை 7 ஒமிக்ரான் தொற்று பதிவாகி உள்ளன.

60% பேருக்கு முழு தடுப்பூசி
ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘இன்னும் புதிய சாதனைகளை செய்யுங்கள். வாழ்த்துக்கள் இந்தியா. பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் நமது சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பு முயற்சியால், தகுதியான 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முழுவதுமாக செலுத்தப்பட்டுள்ளது. 89 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்,’ என கூறியுள்ளார்.

பிரசாரத்தை நிறுத்திய அகிலேஷ்
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள், மகள் டினாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அகிலேஷ். இதன் காரணமாக தனது பிரசாரத்தையும், பொது நிகழ்ச்சிகளையும் 3 நாட்களுக்கு ரத்து செய்துள்ளார். மேலும், தன்னுடன் சமீப நாட்களாக உடனிருந்தவர், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Omigron, corona, vulnerability
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...