×

கூடலூரில் பரிதாபம் நீட் தேர்வில் தோல்வியால் மாணவி விஷம் குடித்து தற்கொலை: பெற்றோருக்கு உருக்கமாக கடிதம்

கூடலூர்: கூடலூரில் நீட் தேர்வில் தோல்வியால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் வசித்தவர் அருளானந்தம். மனைவி புஷ்பா. இவர்களது 2வது மகள் ஜெயா (18). கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பை நிறைவு செய்துவிட்டு கடந்த ஆண்டு 2வது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார். அதற்கான முடிவு கடந்த நவம்பர் மாதம் வந்தபோது அதில் ஜெயா 69 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் காணப்பட்ட ஜெயாவை அவர்களது பெற்றோர் திருப்பூரில் வசிக்கும் அவரது அக்காள் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெற்றோரை பார்க்க கூடலூர் வந்துள்ளார் ஜெயா. அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறியுள்ளனர். இருப்பினும் மன உளைச்சலில் இருந்த ஜெயா, கடந்த 18ம் தேதி தேயிலை செடிகளுக்கு அடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு கூடலூர் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஜெயா பரிதாபமாக இறந்தார். இதுவரை மாணவியின் தற்கொலைக்கான காரணம் தெரியாமல் இருந்தது.  

இந்த நிலையில் வீட்டில் இருந்த அவரது உடமைகளை சோதனை செய்தபோது,  ஒரு கடிதம் சிக்கியது. அதில் ”நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் நான் மன உளைச்சலில் தற்கொலை செய்ய விஷம் குடித்துவிட்டேன். தந்தையும், தாயும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று ஜெயா எழுதி வைத்திருந்தார். ஓவேலி போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிறு வயது முதல் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் படித்து வந்த மாணவி ஜெயா, நீட் தோல்வியால் தற்கொலை செய்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Tags : NEET ,Cuddalore , Need choice, failure, student, suicide
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...