×

திட்டச்சேரி அருகே 29 ஆண்டுக்கு முன் மாயமான பல கோடி மதிப்பு சுவாமி சிலைகள் குடந்தை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கும்பகோணம்: நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகே சன்னியாசி பனங்குடி,  தாளரணேசுவரர் கோயிலில் கடந்த 1992ல் ஆடிப்பூர அம்மன் உலோக சிலை, விநாயகர் சிலை உள்ளிட்டவை கொள்ளை போனது. இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். 1993ல் கண்டுபிடிக்க முடியாத வழக்கு என வழக்கை முடித்தனர். உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, கோயில் அர்ச்சகரிடம் புகார் பெறப்பட்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மாதம் 11ம் தேதி புதிதாக வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில், தாளரணேசுவரர் கோயிலில் இருந்து காணாமல் போன பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடிப்பூர அம்மன் பஞ்சலோக சிலை, கோயில் வழிபாட்டில் இருந்த பஞ்சலோக விநாயகர் சிலை திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 29 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுவாமி சிலைகளை, தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் மீட்டனர். அவற்றை தனிப்படை  போலீசார் கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைத்தனர். சிலைகளை பார்வையிட்ட கூடுதல் தலைமை ஜுடிசியல் நீதிபதி சண்முகப்பிரியா, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள உலோகத்திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார். அதன்படி சிலைகள் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.



Tags : Swami ,Kuttan court ,Tittacherry , Thittacherry, Swami Statues, Court
× RELATED சித்திரை (ஈ) தந்த முத்திரை சீடர்கள்