×

ரூ.16 கோடி செலவில் பாம்பன் சாலைப்பாலத்தை புதுப்பிக்கும் பணி துவக்கம்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் தீவையும், தமிழகத்தின் பெரும் நிலப்பரப்பையும் இணைக்கும் வகையில் பாம்பன் - மண்டபம் இடையில் 1914ல் பாலம் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. அதன்பின் 1988ல் பாம்பன் கடலில் இந்திராகாந்தி சாலைப்பாலம் கட்டப்பட்டு சாலைப் போக்குவரத்தும் துவங்கியது. இதனால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் ராமேஸ்வரம் வந்து செல்கின்றனர். பாம்பன் கடலில் தற்போது ரயில்வே நிர்வாகத்தால் இருவழித்தடத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதுபோல் தேசிய நெடுஞ்சாலை துறையால் பாம்பன் கடலில் நான்கு வழிச்சாலை வசதியுடன் கூடிய புதிய சாலைப்பாலம் கட்டும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது உபயோகத்தில் இருக்கும் இந்திராகாந்தி சாலைப்பாலத்தில் தூண்கள் உள்ளிட்ட பல இடங்களில் கடல் காற்றினால் அரிப்பு ஏற்பட்டு சிமென்ட் கான்கிரீட் பூச்சுக்கள் சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்தை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ரூ.16 கோடியை ஒதுக்கீடு செயதுள்ளது. பாம்பன் கடற்கரையில் சாலைப்பாலம் துவங்கும் இடத்தில் இருந்து பாலத்தின் தூண்களை சுத்தம் செய்யும் பணி நேற்று துவங்கியது. பெயின்ட் பூச்சுகளை ஏர் கம்ப்ரைசர் மூலம் அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.

Tags : Pompon roadway , Pamban, road bridge, renovation work
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...