×

கோயில் மனை, கட்டிடங்களுக்கு வாடகை நிர்ணயம் தலைமை செயலாளர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் மனைகள், வீடுகள், கட்டிடங்கள், கடைகளுக்கான  நியாய வாடகை  நிர்ணயம் செய்ய தலைமைசெயலாளர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அறநிறுவனங்களுக்கு ஒரேமாதிரியான வழிகாட்டு முறையில் நியாய வாடகை நிர்ணயம் செய்வது அவசியம் என்பதாலும், நியாய வாடகை அப்பகுதியில் நிலவும் சந்தை வாடகை மதிப்பின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயக்குழுவில் வைத்து மறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது, பரிசீலனைக்குப்பின், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சமய மனைகள், வீடுகள், கட்டிடங்கள் மற்றும் கடைகளுக்கு நியாய வாடகை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய எதுவாக மற்றும் நியாய வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக, இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டப்பிரிவு 34 Aன்கீழ் ஒரே மாதிரியான நிலையான வழிகாட்டுமுறைகளை கருத்திடவும், அதனடிப்படையில், விதிகளை ஏற்படுத்தி பரிசீலனை செய்திட உரிய ஆலோசனை வழங்க கீழ்க்காணும் அலுவலர்களை கொண்ட குழுவினை அமைத்து அரசு ஆணையிடுகிறது.

அதன்படி இக்குழுவுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு தலைவராக செயல்படுகிறார். அறநிலையத்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், வணிகவரித்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், அறநிலையத்துறை ஆணையர், நிலநிர்வாகத்துறை கூடுதல் இயக்குனர், பத்திரப்பதிவுத்துறை கூடுதல் பதிவுத்துறை தலைவர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (விசாரணை), இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் (ஆலய நிலங்கள்), இந்து சமய அறநிலையத்துறை தலைமை பொறியாளர் ஆகிய 10 பேர் கொண்ட உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Chief Secretary ,Government of Tamil Nadu , Temple Land, Rent Determination, Chief Secretary, Committee Appointment, Government of Tamil Nadu
× RELATED குஜராத் மாஜி தலைமை செயலாளருக்கு லோக்பால் உறுப்பினர் பதவி