×

இறைச்சி கடைகளில் உரிமம் இல்லாமல் ஆடு, கோழி வெட்டுபவர்கள் மீது வழக்கு: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உரிய உரிமங்கள் இல்லாமல் இறைச்சி கடைகளில் ஆடு, கோழிகளை வெட்டுபவர்களுக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டம், பனகல் கிராமத்தில் முகமது அலி என்பவர் உரிமம் இல்லாமல் இறைச்சிக்கடையில் ஆடு, கோழிகள் வெட்டப்படுவதாக கூறி அந்த கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், உணவுக்காக விலங்குகள் வெட்டப்படுவதை முறைப்படுத்தும், விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்,\” உரிமம் இல்லாமல் ஆடு, கோழிகள் வெட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்களா என்று தெரிவிக்காததில் இருந்து இந்த விதிகள் அமல்படுத்தப்படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. விதிகளை அமல்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிமம் இல்லாமல் ஆடு, கோழிகளை வெட்டுபவர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


Tags : High Court of Chennai , Meat Shop, Goat, Poultry, Case, Chennai High Court
× RELATED கால்நடை மேய்ச்சலுக்கான புறம்போக்கு...