×

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு செல்போனில் பேசியவர்கள், உறவினர்களிடம் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது: தொடர்பில் இருந்த அதிமுக விஜபிக்கள் கலக்கம்

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய மாசு காட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏ.வி.வெங்கடாசலம். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வனத்துறையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பிறகு அதிமுக விஜபிக்களிடம் நெருக்கமாக பழகியதால் அதற்கு பரிசாக கடந்த 2019 ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக அதிமுக அரசு நியமித்தது.

2 ஆண்டுகள் பதவி காலத்தில் வெங்கடாசலம் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பணியில் இருந்து ஓய்வுபெறும் நாளில், வெங்கடாசலத்திற்கு சொந்தமான வேளச்சேரியில் உள்ள வீடு, சேலம் மாவட்டம் ஆத்தூரில் அருகே அம்மாப்பளையத்தில் உள்ள வீடு, கிண்டியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகம் என 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்அதிரடி சோதனை நடத்தினர்.

அதில், கணக்கில் வராத ரூ.13.50 லட்சம் ரொக்க பணம், 11 கிலோ தங்கம், 15.25 கிலோ சந்தன மரம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சோதனையில் கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் சொத்துக்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் கோட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையே கடந்த மாதம் இறுதியில் வெங்கடாசலம் தனது குடும்பத்துடன் சொந்த மாவட்டமான சேலத்திற்கு சென்று வந்தார். அப்போது அதிமுக முக்கிய விஐபிக்கள் வெங்கடாசலத்தை நேரில் அழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சேர்ந்ததான் சில முறைகேடுகளில் வெங்கடாசலம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு அவர் பயந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சேலத்தில் இருந்து சென்னை வந்த வெங்கடாசலம் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த 2ம் தேதி மதியம் உணவுக்கூட அருந்தாமல் வெங்கடாசலம் தனது வீட்டின் முதல் மாடியில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடாசலம் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அரசியல் பின்னணி இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
அதேநேரம் வெங்கடாலசம் இறப்பு குறித்து அவரது உறவினர்களும் ஆட்சபனை தெரிவித்தனர். இந்த வழக்கு மாநகர காவல் துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி கடந்த 9ம் தேதி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதைதொடர்ந்து வேளச்சேரி காவல் நிலையத்தில் வெங்கடாசலம் தற்கொலைக்கான விசாரணை அறிக்கையை போலீசார், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த அறிக்கையை தொடர்ந்து வெங்கடாசலம் தற்கொலை வழக்கை சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து தனது விசாரணையை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக வெங்கடாசலம் செல்போனில் அவர் தற்கொலைக்கு முன்பு 15 நாட்கள் பேசிய நபர்கள் யார் யார் என்பது குறித்து பட்டியலை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பட்டியலில் வெங்கடாசலத்திடம் அதிமுக விஐபிக்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் நெருக்கமாக பேசி இருந்ததாக தெரிகிறது. அதேபோல் வெங்கடாசலம் உறவினர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Pollution Control Board ,Venkatachalam , Former Pollution Control Board chairman Venkatachalam commits suicide over cell phone
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...