×

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட மதுரை நகர வளர்ச்சி குழுமம் அமைப்பு; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் 2021-2022ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் தற்போது 10 லட்சம் பேர் வசிக்கக்கூடிய நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமயமாக்கலை ஒழுங்குபடுத்தி, திட்டமிட்ட நகரங்கள் அமைவதை உறுதி செய்திட, புதிய நகர வளர்ச்சிக் குழுமங்கள், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் பகுதி, வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் பகுதிக்கு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை அடிப்படையாக கொண்டு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நகர வளர்ச்சிக் குழுமத்தை தற்காலிகமாக உருவாக்கிட அரசாணை நேற்று (22ம் தேதி) வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மதுரை நகர வளர்ச்சிக் குழுமத்தை தற்காலிகமாக அமைத்திட கடந்த 16ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் மாநகரங்களில் மதுரை மூன்றாவது பெரிய மாநகராக 147.97 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் அமைந்துள்ளது. மதுரை, நீண்ட நெடிய பாரம்பரியமும், தொன்மை வாய்ந்த கலாச்சாரமும் கொண்டதாகவும், சர்வதேச விமான நிலையம், ரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, பெரும் வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகள் கொண்ட மாநகரமாகவும் திகழ்ந்து வருகிறது. வைகை நதி பாயும் மதுரையில் நிலத்தடி நீரும் செரிந்து காணப்படுகிறது. மதுரை மாநகரம், கடந்த 30 ஆண்டு காலத்தில் அதீத மக்கள்தொகை பெருக்கத்தால் அதன் உட்கட்டமைப்பு வசதிகளில் பெரும் இடர்பாடுகளை சந்தித்து வருகிறது.

இதன்காரணமாக இம்மாநகரத்தில் சாலை, சுகாதாரம், கல்வி, குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வசதிகள் ஒழுங்கற்ற வளர்ச்சியை பெற்றுள்ளது. மதுரை மாநகரின் சீரான வளர்ச்சிக்காக தற்போது தயாரிக்கப்பட்டு வரும் மதுரை முழுமைத் திட்டம், மதுரை மாநகரின் வருங்கால வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக அமையும். இம்முன்னோக்கு திட்டமானது, மதுரை மாநகரின் திட்டமிடல் பகுதியின் அனைத்து துறைகளின் வளர்ச்சியின் தேவைகளை எதிர்நோக்கி தயாரிக்கப்படும். மதுரை நகர வளர்ச்சிக் குழுமத்தை தற்காலிகமாக அமைத்திட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் தலைவராகவும், மதுரை கலெக்டர் துணைத் தலைவராகவும் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் மதுரை நகரப் பகுதிகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படும். அத்தகைய திட்டங்கள், புதிய நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் கீழ், மண்டல திட்டம், முழுமையான திட்டம், விரிவான வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றை வழங்கும்.

மேலும், மதுரை நகர் பகுதிகளில் உள்ள வளர்ச்சிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதை ஒருங்கிணைத்தல், திட்டங்களை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுதல், நிதியுதவி அளித்து திட்டங்களை செயல்படுத்துதல், அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட பிற பணிகளையும் மேற்கொள்ளும். மதுரை நகர வளர்ச்சி குழுமத்தின் வளர்ச்சி திட்டங்களை தயாரித்து செயல்படுத்தி ஆலோசனை வழங்கிட 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை நகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் பணி மேற்கொள்ள, திட்டக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள முதுநிலை நகர திட்டமிடல் அலுவலர், பொறியாளர் மற்றும் இதர அலுவலர்கள் உதவுவர். மதுரை நகர வளர்ச்சி குழும அமைப்பானது, மதுரை மாநகரின் சீரான வளர்ச்சிக்கும், சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடவும், நன்கு திட்டமிடப்பட்ட நகரமாக உருவாவதற்கும் வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Madurai City Development Group ,Tamil Nadu Government , Organization of Madurai Urban Development Corporation to improve basic infrastructure; Government of Tamil Nadu Notice
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...