×

ரஃபேல் விமானத்திற்கு ஏவுகணை வழங்குவதில் தாமதம்: பிரான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.8.53 கோடி அபராதம்

டெல்லி: இந்திய ராணுவத்துக்கு அதி நவீன விமானங்களை வழங்குவது தொடர்பாக பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் அதற்குரிய பாகங்களை வழங்குவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய விதிமுறையாகும். ஆனால் ஒப்பந்தப்படி உரிய காலத்தில் உதிரி பாகங்களை வழங்கத் தவறியதால் பிரான்ஸ் நிறுவனத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 10 லட்சம் யூரோ (சுமார் ரூ.8.53 கோடி) அபராதம் விதித்துள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த தஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனம் ரஃபேல் போர் விமானங்களைத் தயாரிக்கிறது. இதில் பொருத்தும் ஏவுகணைகளை எம்பிடிஏ நிறுவனம் சப்ளை செய்ய வேண்டும் என்பது ஒப்பந்த விதியாகும்.

இதற்கான ஒப்பந்தம் 2016-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் கையெழுத்தானது. இதன்படி 36 ரஃபேல் போர் விமானங்களை சப்ளை செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.59 ஆயிரம் கோடியாகும். ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மொத்த மதிப்பில் 50 சதவீத தொகை இந்தியாவில் முதலீடு செய்யப்பட வேண்டும். 2019-20-ம் ஆண்டு காலத்தில் இந்த விதிமுறைகளை நிறைவேற்றாததால் எம்பிடிஏ நிறுவனத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அபராதம் விதித்துள்ளது.

இந்த அபராதத் தொகையை எம்பிடிஏ செலுத்தியுள்ளது. இருப்பினும் இது தொடர்பான எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கருத்து எதையும் எம்பிடிஏ நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஃபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கு வந்தது. இது தொடர்பாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) தாக்கல் செய்த அறிக்கையில் தஸ்ஸோ மற்றும் எம்பிடிஏ நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விதிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

நேற்று நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தஸ்ஸோ மற்றும் எம்பிடிஏ நிறுவனங்கள் 30 சதவீத தொகையை முதலீடு செய்திருக்க வேண்டும். அல்லது அதற்குரிய தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ-வுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இவ்விரு நிறுவனங்களும் இதுவரை இதை மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : rafale
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!