×

கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே ரயில்வே கிராசிங்கில் குண்டும், குழியுமான சாலையால் தொடரும் விபத்துகள்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கண்ணமங்கலம் : வேலூர்-திருவண்ணாமலை சாலையில் கண்ணமங்கலம் காவல்நிலையம் அருகே ரயில்வே கிராசிங் உள்ளது. வேலூரிலிருந்து கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தஞ்சாவூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும்  விரைவு பஸ்கள், சரக்கு வாகனங்கள், பள்ளி பஸ்கள், இரு சக்கர வாகனங்கள், திருப்பதி, சித்தூர், ஒசூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கும், திருவண்ணாமலை,  ஸ்ரீபுரம் தங்க ேகாயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள்  என ஆயிரக்கணக்கான வாகனங்கள்  இந்த சாலை வழியாக தினசரி சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.

இந்நிலையில் இங்குள்ள தண்டவாளங்களை சீரமைக்க ரயில்வே துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் இரண்டு தினங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்றன.அப்போது தண்டவாளத்தை மட்டும் சீரமைத்த ரயில்வே துறையினர் சாலையை சரிசெய்யாமல் அப்படியே குண்டும் குழியுமாக விட்டு சென்றனர். இதனால் அந்த வழியாக வரும் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இரவில் வருபவர்கள் தொடர்ந்து விபத்துக்கு ஆளாகிறார்கள்.

மேலும் இதே சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வேலூர் மாவட்டம் வல்லம் டோல்கேட் அருகே நான்குபுறமும் மிகவும் ஆபத்தான பெரிய பள்ளங்கள் உள்ளன. இரவு நேரத்தில் அதிவேகமாக வரும் வாகனங்கள் இந்த பள்ளங்களில் இறங்கி விபத்துக்குள்ளாவதும், இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தினசரி அடிபட்டு மருத்துவமனைக்கு செல்வதும் வாடிக்கையாகி விட்டது. தேசிய நெடுஞ்சாலையில் இவ்வளவு பெரிய பள்ளங்கள் இருப்பதை நெடுஞ்சாலை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது வேதனையளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வல்லம் ஊராட்சி தலைவர் சிவகுமார் ரயில்வே துறைக்கு பொதுமக்கள் சார்பாக முறைப்படி புகார் அளித்துள்ளார்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து  ரயில் பாதையை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kannamangalam police station , Kannamangalam: There is a railway crossing near the Kannamangalam police station on the Vellore-Thiruvannamalai road. From Vellore
× RELATED கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே...