உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனை 100 பெட் மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிக்கப்படுமா?நூற்றாண்டு விழாவையொட்டி மக்கள் எதிர்பார்ப்பு

உத்தமபாளையம் : உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனை கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆன நிலையில், 100 பெட் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனை கடந்த 1921ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட பிரிட்டிசார் ஆட்சியின்போது கட்டப்பட்டது. இதற்கான நிலத்தை ஹாஜி கருத்தராவுத்தர் கொடுத்துள்ளார். இதனால் ஹாஜி கருத்தராவுத்தர் அரசு மருத்துவமனை என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது.

1921ம் ஆண்டு காலகட்டத்தில், காலரா, பிளேக் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சிகிச்சை பெற்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இதேபோல் விபத்து மரணம், போலீஸ் வழக்கு மரணங்கள் போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆங்கிலேயர் காலத்தில் இம்மருத்துவமனையே அங்கீகரிக்கப்பட்டு இருந்துள்ளது. பிரசவங்கள் பல ஆயிரக்கணக்கில் இங்கு நடந்துள்ளது. அன்று முதல் இன்று வரை இம்மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு என தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், அனுமந்தன்பட்டி மற்றும் தே.சிந்தலைசேரி, பூசாரி கவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, பல்லவராயன்பட்டி என சுற்றிலும் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். தினந்தோறும் 800 முதல் 1000 வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்த மருத்துவமனை தற்போது மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஆண், பெண் உள்நோயாளிகள் பிரிவுடன் இயங்கி வருகிறது. சித்தா பிரிவு, இயற்கை யோகா, பிரிவுகளுடன் 72 பெட் வசதி மட்டுமே உள்ளது. மருத்துவமனை தொடங்கப்பட்டு 2021ம் ஆண்டுடன் 100 ஆண்டுகள் முடிகிறது. எனவே இந்த மருத்துவமனையை விரிவாக்கம் செய்து 100 பெட் வசதியுடன், தற்போது காலியாக உள்ள தாலுகா அலுவலகத்தை இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காரணம் இந்த மருத்துவமனை சுற்றி உள்ள மக்களின்,  நோய்களுக்கு பெரும் நோய் தீர்க்கும் சிகிச்சை மையமாக உள்ளதால், தமிழக சுகாதாரத்துறையின் கவனம் திரும்பிட வேண்டும்.

இங்கு 6 டாக்டர்கள் மற்றும் ஒரு தலைமை மருத்துவ அதிகாரி என்ற நிலையில் மிக முக்கியமான டி.ஜி.ஓ.(மகப்பேறு), எம்.டி., (இதயவியல்), எம்.டி.(எலும்பு முறிவு) டாக்டர்கள் இல்லை. 6 டாக்டர்களில் 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. தினமும் வரக்கூடிய வெளிநோயாளிகளை சமாளிப்பதே பெரும் சிக்கலாக உள்ளது. எனவே, 72 பெட் தகுதிக்கே இன்னும் 5 டாக்டர்கள் என மொத்தம் 12 டாக்டர்கள் வேண்டும். 100 பெட் வசதியாக மருத்துவமனையை விரிவாக்கம் செய்தால் 15 டாக்டர்கள் வரை பணி அமர்த்தப்படுவர். பொதுமக்கள் உயிர்கள் காக்கப்படும்.

மக்கள் கூறுகையில், இந்த மருத்துவமனையில் 100 பெட் வசதி ஏற்படுத்தப்பட்டால் குறைந்தது 10 டாக்டர்கள், அதிகமான  நிரந்தர செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், ஸ்கேன், எக்கோ ஸ்கேன்,  விபத்து அவசர சிகிச்சை கிடைக்கும். எனவே தமிழக அரசு பரீசீலனை செய்வது மிகவும் அவசியம் என தெரிவித்தனர்.

பிரசவம் இல்லை....

சீமாங் சென்டர்கள் தொடங்கப்பட்ட பின்பு இங்கு வரக்கூடிய கர்ப்பிணிகள் பேறு காலத்திற்காக, தேனிக்கோ, கம்பத்திற்கோ விரட்டியடிக்கப்படுகின்றனர். வாரத்தில் ஒருநாள்தான் ஸ்கேன் பார்க்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் அதிகம் விபத்து நடக்கும் இடங்கள் இம்மருத்துவமனையை சுற்றிலும் உள்ளது. விபத்து நடந்து அவசர சிகிச்சைக்கு வந்தால், முதலுதவி மட்டுமே அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்கு தேனி க.விலக்கு மருத்துவமனைக்கு அனுப்பும் அவலம் தொடர்கிறது.  தாலுகா மருத்துவமனை அந்தஸ்து இருந்தும், இம்மருத்துவமனை தரம் உயர்த்தப்படாமலேயே உள்ளதால், மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

Related Stories: