×

பிளாஸ்டிக்கு குட் பை; மீண்டும் 'மஞ்சப்பை'நோக்கி தமிழகம்!: இயக்கத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மஞ்சள் பை இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மக்கள் துணிப்பைகளுக்கு மீண்டும் திரும்பும் வகையில், மீண்டும் மஞ்சள் பை இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. ஒரு பிளாஸ்டிக் பைய்யானது மக்களால் சராசரியாக பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அவை மக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகளாகும். அதிகப்படியான இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டினால் பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வுகளையும், அதற்கு மாற்றான துணி பைகளை உபயோகிக்கும் பழக்கத்தையும் பொதுமக்கள் இடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் மஞ்சள் பை பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சள் பை பரப்புரைக்கான நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில்  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்பட கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவானர் அரங்கத்தில் வைக்கப்பட உள்ளது.

பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களுக்கான கண்காட்சியை இன்று மாலை 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டு, அதனை தங்களுடைய வாழ்விலும் உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மூத்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் இதர அதிகாரிகள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : KKA ,Stalin , Cloth, 'yellow', artist, MK Stalin
× RELATED சொல்லிட்டாங்க…