×

நாடாளுமன்ற துளிகள்... கூட்டுறவு அபிவிருத்தி நிதியம் உருவாக்கப்படுமா?

மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த், ‘நாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு நிதியுதவி வழங்குவதற்காக, தேசிய கூட்டுறவுச் சங்கங்கள் அபிவிருத்தி நிதியத்தை உருவாக்க ஒன்றிய அரசிடம் திட்டம் ஏதேனும் உள்ளதா? அப்படி எனில், அதன் விவரங்கள், இல்லையெனில், இது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? அதிகார வரம்புகள் வரையறுக்கப்பட்டு உள்ளதா? பல மாநில கூட்டுறவுச் சங்கங்கள், மாநிலத்திற்குள் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களை கையாள்வதில் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த அமைச்சகத்தின் பொறுப்புகள் என்ன? ஆம் என்றால், அதன் விவரங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாநில அரசுகளின் உரிமைகளை மீறாமல், மாநில அரசுகளுடன் இணைந்து ஒன்றிய அரசு செயல்படும் விதம் என்ன? என கேள்வி கேட்டார்.

இதற்கு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், ‘நாடு ஏற்கனவே வளமான கூட்டுறவு பாரம்பரியத்தையும், வலுவான கூட்டுறவுத் துறையையும் கொண்டுள்ளது. நாட்டில் 2 வகையான கூட்டுறவு கட்டமைப்புகள் உள்ளன. அதாவது, மாநில கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பல மாநில கூட்டுறவு சங்கங்கள். ஒரு மாநிலத்தில் மட்டுமே செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், அந்தந்த மாநில அரசின் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்கள், ஒன்றிய அரசு சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. அதாவது, பல மாநில கூட்டுறவுச் சங்கங்களுக்கு சட்டம், 2002ன் பிரிவு 84 மற்றும் 108ன் கீழ் சில அதிகாரங்கள் இந்திய அரசால் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன,’ என தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதில்கள் வருமாறு:
* சிறுபான்மையினரை தாக்கிய 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்முவில் 2018ம் ஆண்டில் 417 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இது இந்தாண்டில் பெருமளவு குறைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி வரை 203 தாக்குதல்கள் மட்டுமே நடந்துள்ளன. அதே நேரம், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தப்பி சென்ற ஒருவன் உள்பட 7 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாத ஊடுருவலைக் கண்காணிக்க பகல், இரவு நேர ரோந்து பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

* பதஞ்சலி உட்பட 11 தனியார் கம்பெனிக்கு ஒன்றிய பாதுகாப்பு
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நாட்டில் உள்ள 64 விமான நிலையங்கள், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை உள்பட 11 தனியார் துறைகளுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதில், இன்போசிஸ், ரிலையன்ஸ், டாடா, பதஞ்சலி, பாரத் பயோடெக் உள்ளிட்ட 11 தனியார் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

* உபா சட்டத்தில் 4,690 பேர் கைது
சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ், நாடு முழுவதிலும் இருந்து கடந்த 2018ல் 1,421, 2019ம் ஆண்டு 1,948, 2020ல் 1,321 பேர் என மொத்தம் 4,690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2018ல் 35, 2019ல் 34 மற்றும் 2020ம் ஆண்டில் 80 பேர் என மொத்தம் 149 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

* பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
தென்சென்னை மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், டெல்லியில் நேற்று ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில், ‘பள்ளிக்கரணை சதுப்பு நிலம். நாட்டின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றான ஈரநிலமாகும். சதுப்புநில சீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த விரிவான திட்ட அறிக்கை, தற்போது வரையில் நிலுவையில் உள்ளது. இந்த திட்டம் அருகில் உள்ள குடியிருப்பாளர்களுக்கும், சுற்றுச்சூழல் அமைப்புக்கும் உகந்தது என்பதை கருத்தில் கொண்டு அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.


Tags : Co-operative Development Fund , Parliamentary drops ... Will the Co-operative Development Fund be created?
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்