×

உத்தரகாண்டிலும் சலசலப்பு தலைமை என்னை கைவிடுகிறது: காங். மூத்த தலைவர் ராவத் திடீர் குற்றச்சாட்டு

டேராடூன்: ‘நான் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது. புத்தாண்டு எனக்கு வழிகாட்டலாம்’ என உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், மாநில மூத்த காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத்தின் டிவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2014  மற்றும் 2019 மக்களவை தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து வருகிறது. அதோடு கட்சியில்  இருந்து பல முக்கிய தலைவர்கள் பல்வேறு கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சித் தலைமை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் காரணமாக தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு  நிலவி வருகிறது.

இதற்கிடையே, அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முயற்சி  மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் நேற்று தனது அடுத்தடுத்த டிவிட்டர் பதிவில் சூசமாக அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘தேர்தல்  எனும் பெருங்கடலை நான் நீந்திக் கடக்க வேண்டிய இந்த நேரத்தில் எனக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக, தலையை திருப்பிக் கொண்டு நிற்பதும், எனக்கு எதிராக செயல்படுவதும் விந்தையல்லவா? அதிகாரம் படைத்தவர்கள் கடலில்  முதலைகளை விட்டுச் சென்றுள்ளனர்.

நான் நீந்த வேண்டும் என யார் உத்தரவிடுகிறார்களோ, அவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் என் கைகளையும், கால்களையும் கட்டுகிறார்கள். நான் நிறைய எண்ணங்களால் நிரம்பியிருக்கறேன். ‘ஹரிஷ் ராவத் நீ நீண்ட நேரம் நீந்திவிட்டாய், இது ஓய்வு எடுக்க வேண்டிய  நேரம்’ என சில நேரங்களில் எனது மனதுக்குள் ஒரு குரல் ஒலிக்கிறது. நான் இக்கட்டான நிலையில் இருக்கிறேன். புத்தாண்டு எனக்கு வழிகாட்டலாம்’ என கூறி உள்ளார். இந்த டிவிட்டர் பதிவுகள் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த குழப்பத்தை தொடர்ந்து உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரான ராவத் இப்படிப்பட்ட பதிவிட்டிருப்பது பல்வேறு  ஊகங்களுக்கு வழிவகுக்கிறது.

* பாஜ செய்யும் சதி
காங்கிரஸ் மூத்த தலைவரும், ராவத்தின் ஊடக ஆலோசகருமான சுரேந்திர குமார் கூறுகையில்,  ‘‘உத்தரகாண்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கக் கூடாது என்பதற்காக, கட்சியின் வெற்றி வாய்ப்புகளை கெடுக்க, கட்சிக்குள் இருக்கும் சில சக்திகள் பாஜவின் கரங்களால் ஆட்டிப்படைக்கப்படுகின்றன. இதில் பாஜவின் சதி உள்ளது’’ என்றார்.

Tags : Uttarakhand ,Rawat , The bustling leadership in Uttarakhand also abandons me: Cong. Senior leader Rawat's sudden accusation
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்