பிரதமர் பதிலளிக்க காங். வலியுறுத்தல் அயோத்தி ராமர் கோயிலை சுற்றி நிலம் வாங்கி குவிக்கும் பாஜவினர்

புதுடெல்லி: சொந்த ஆதாயத்துக்காக அதிகாரத்தை பயன்படுத்தி, அயோத்தி ராமர் கோயிலை சுற்றி பாஜ.வினர் நிலம் வாங்கி குவிப்பது தொடர்பாக பிரதமர் மோடி விசாரணை நடத்த வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

உத்தரப்பிரேதச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து கடந்த 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, ராமர் கோயில் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்நிலையில், ராமர் கோயில் அமையும் இடத்தை சுற்றி ரியல் எஸ்டேட் தொழில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதை பயன்படுத்தி பாஜ.வினர் பலர் அங்கு, தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி நிலம் வாங்கிக் குவிப்பதாக பத்திரிகை ஒன்றில் ஆய்வுக்கட்டுரை வெளியானது.

அதில் பாஜ எம்எல்ஏக்கள், முன்னாள் மேயர்கள், அரசு உயர் பதவி வகிப்பவர்கள், போலீஸ் அதிகாரிகள் பலரும் தங்கள் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் நிலங்களை வாங்கி குவிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தலித்களின் நிலங்களை மோசடி செய்து வாங்கிய அறக்கட்டளை மூலமாக அதிகாரத்தில் இருப்பவர்கள் குறைந்த விலைக்கு நிலம் வாங்கி குவிப்பதாகவும் கூறப்படுகிறது. அரசியல் செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி இதுபோன்று நிலம் வாங்குபவர்கள் மீது பாஜ தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பதிவில், ‘இந்து உண்மையின் பாதையில் செல்கிறது. இந்துத்துவா மதத்தின் பெயரால் கொள்ளை அடிக்கிறது,’ என அந்த செய்தியை டேக் செய்து விமர்சித்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா அளித்த பேட்டியில், ‘‘இந்த வெளிப்படையான ஊழல் பற்றி பிரதமர் மோடி வாய் திறப்பாரா? விசாரணை நடத்துவாரா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: