×

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் தாமதம் பிரான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.8.53 கோடி அபராதம்: பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி

புதுடெல்லி: ரபேல் ஒப்பந்தத்தை மீறிய பிரான்ஸ் ஏவுகணை நிறுவனத்துக்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ரூ.8.53 கோடி அபராதம் விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா 36 ரபேல் போர் விமானங்களை ரூ.59,000 கோடிக்கு வாங்க, டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் கடந்த 2016ம் ஆண்டில் ஒப்பந்தம் செயதது. அதன்படி, முதல் பிரிவு ரபேல் போர் விமானங்கள் கடந்தாண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. இதுவரையில் 32 விமானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் டசால்ட் நிறுவனத்துக்கு, இந்த விமானத்துக்கான ஏவுகணைகளை தயாரித்து ஐரோப்பியாவை சேர்ந்த எம்பிடிஏ நிறுவனம் வினியோகிக்கிறது. ரபேல் ஒப்பந்தத்தின்படி, இந்த 2 நிறுவனங்களும் ஒப்பந்த தொகையில் 50 சதவீதத்தை கடந்த செப்டம்பர் 2019 முதல் செப்டம்பர் 2022 வரையில் இந்தியாவில் மறுமுதலீடு செய்ய வேண்டும்.

ஆனால், இந்த 2 நிறுவனங்களுமே இந்த முதலீட்டை இந்தியாவில் இதுவரையில் செய்யவில்லை என்று தலைமை கணக்கு தணிக்கை குழு சமீபத்தில் சுட்டிக்காட்டி இருந்தது. இதையடுத்து, ஒப்பந்தத்தை மீறியதற்காகவும், மறுமுதலீட்டை செய்ய தவறியதற்காகவும் எம்பிடிஏ நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு ரூ.8.53 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த தொகையை செலுத்தி விட்ட போதிலும், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எம்பிடிஏ நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தலைமை கணக்கு தணிக்கை குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், `டசால்ட் ஏவியேஷன், எம்பிடிஏ நிறுவனங்கள் கடந்த 2015ம் ஆண்டு முதல் ரபேல் போர் விமானத்தின் உயர் தொழில்நுட்பத்தில் 30 சதவீதத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்துக்கு அளிப்பதாக கூறியுள்ளன. ஆனால், 2 நிறுவனங்களும் அதன்படி நடந்து கொள்ளவில்லை,’ என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags : France ,Raphael ,Defense Ministry , French company fined Rs 8.53 crore for delay in Raphael deal: Defense Ministry
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...