33 ஆண்டுகள் ஆக்கிரமிப்பாளரின் பிடியில் இருந்த எழும்பூர் சீனிவாச பெருமாள் கோயிலின் ரூ.6 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: எழும்பூர் சீனிவாச பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 3390 சதுர அடி பரப்பளவிலான ரூ.6 கோடி மதிப்பிலான சொத்தை மீட்டு அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான நிலங்கள் எந்தவித பயன்பாடின்றி அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருந்தது. அதேபோன்று, கட்டிடங்களின் வாடகைதாரர்கள் முறையாக வாடகை செலுத்துவதில்லை. மாறாக, உள்வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வந்தனர். இதனால், அறநிலையத்துறைக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், அறநிலையத்துறை அமைச்சராக சேகர் பாபு பொறுப்பேற்ற பிறகு, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்கவும் மற்றும் வாடகை செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்றும் நடவடிக்கையில் அறநிலையத்துறை இறங்கியுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் சீனிவாச பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 3390 சதுர அடி பரப்பளவில் மனை மற்றும் கட்டிடம் பாலகிருஷ்ணன் என்பவருக்கு 33 ஆண்டுகளாக வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இவர் கட்டிடத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகையை முறையாக செலுத்தவில்லை.

அவர், ரூ.75 லட்சத்து 11 ஆயிரத்து 136 வரை வாடகை பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து, பாலகிருஷ்ணனை ஆக்கிரமிப்பாளராக கருதி அகற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2ம் தேதி ஆக்கிரமிப்பாளரை வெளியேற்ற உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, செயல் அலுவலர் ரமணி தலைமையில் சென்ற கோயில் ஊழியர்கள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையுடன் இணைந்து மனை மற்றும் கட்டிடத்தை மீட்டு கோயில் வசம் ஒப்படைத்தனர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.6 கோடி வரை இருக்கும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: