சென்னை மாநகராட்சியில் தீவிர தூய்மை பணியில் 1,739 டன் கழிவு அகற்றம்

சென்னை: சென்னையில் தீவிர தூய்மைப்பணி திட்டத்தின் கீழ் 655 டன் குப்பை, 1,084 டன் கட்டட கழிவுகள் என 1,739 டன் திடக்கழிவுகள்  அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.  சென்னை  மாநகரை தூய்மையாக பராமரிக்கும்  வகையில் மாநகராட்சியின் சார்பில்  திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை  மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல்,  பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள்  அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும்  பணிகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகாகவும்   பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள்   குறிப்பாக அரசு சுவர்கள், பாலங்கள், தூண்கள் போன்ற இடங்களில்   ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டு, கண்கவரும் வண்ண ஓவியங்கள்   வரைந்து அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகரின் பசுமைப்   பரப்பளவை அதிகரிக்கும் வகையில், மாநகரின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள்   நடப்பட்டு அவை தொடர்ந்து பராமரிக்கப்பட்டும் வருகின்றன.  இதனைத்   தொடர்ந்து, சென்னையில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட குப்பைகள் மற்றும்   கழிவுகள் மாநகராட்சியின் சார்பில் தீவிர தூய்மைப் பணியின் மூலம்   அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக ஏற்பட்ட கழிவுகள் மற்றும்   நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை   முழுமையாக அகற்றிட ஏதுவாக வரும் 20ம் தேதி முதல் தீவிர தூய்மைப் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில்   மாநகராட்சிக்குட்பட்ட 358 இடங்கள் தெரிவு செய்யப்பட்டு குடிசைப் பகுதிகள், அதிகளவில் குப்பைத்  தேங்கியுள்ள இடங்கள், நீர்நிலைகள், திறந்தவெளி பெரிய கால்வாய்கள் மற்றும்   நீரோடைகள் போன்ற இடங்களில்  காணப்படும் குப்பைகள் முன்னுரிமையின்   அடிப்படையில் அகற்றப்பட உள்ளன.

இந்தப் பணியில்  பிரத்யேகமாக  பெருநகர சென்னை மாநகராட்சியின் பள்ளி வளாகங்கள், மருத்துவமனை  வளாகங்கள்  மற்றும் சுடுகாடு, இடுகாடு என 96 இடங்களில் நீண்ட நாட்களாக  தேங்கியுள்ள  குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றனர்.மேலும் இந்த தீவிர தூய்மைப்பணியில்  4,493 தூய்மைப்  பணியாளர்கள், 1,410  சாலைப் பணியாளர்கள், 109  காம்பேக்டர்கள், 253  ஜே.சி.பி. இயந்திரங்கள், 308 டிப்பர் லாரிகள், 537  பேட்டரியால் இயங்கும்  வாகனங்கள், 276 மூன்று சக்கர வாகனங்கள்  பயன் படுத்தப்பட்டு இரண்டு நாட்களில் தீவிர தூய்மை பணியின் கீழ் 655 டன் குப்பை, 1,084 டன் கட்டட கழிவுகள் என 1,739 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: