×

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 104 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 104 பேருக்கு ‘எஸ்’ ஜீன் குறைபாடு உள்ள ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் மாதிரிகள் ஒன்றிய அரசின் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் விரைவில் வரும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளின் தகவல் குறித்த டிஜிட்டல் பலகையை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகன், மருத்துவமனை டீன் சாந்திமலர் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பலகை மூலம், இங்கு எந்த மாதிரியான மருத்துவ சேவைகள், சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. எத்தனை பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த மருத்துவமனையின் சாதனைகள் என்னென்ன என்பது குறித்து பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்பட்டு கொண்டே இருக்கும். இதேபோன்று தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இந்த வசதி அமைக்கப்படும்.

தமிழகத்தில் தினமும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பாதிப்பும் குறைந்து கொண்டே வருகிறது. தமிழக விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக அதிக ஆபத்தான நாடுகள், குறைந்த ஆபத்தான நாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 104 பேருக்கு ‘எஸ்’ ஜீன் குறைபாடு உள்ள ஒமிக்ரான் தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 82 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் மட்டும் 71 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களின் மாதிரிகள் ஒன்றிய அரசின் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 13 பேரின் முடிவுகளை ஒன்றிய அரசு அனுப்பி உள்ளது. அதில் ஒருவருக்கு மட்டுமே இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 8 பேருக்கு டெல்டா வகை தொற்று பாதிப்பும், 4 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என முடிவு வந்துள்ளது. 22 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வரும். தமிழகத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 667 பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 669 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை டெங்குவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆய்வகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரின் மாதிரிகளும் பெங்களூருவில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister Ma Subramaniam , From abroad For 104 people who came to Tamil Nadu Omigron Symptom: Minister Ma Subramaniam Information
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...