300 கோடியில் கட்ட மதிப்பீடு தயாரிப்பு 3 ஆயிரம் கோயில்களில் சிலை பாதுகாப்பு அறை: அறநிலையத்துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை: கோயில்களில் சிலை பாதுகாப்பு அறைகளை கட்ட ஆய்வு நடத்தி திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்ற இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரம் பிரதான கோயில்கள் அடக்கம். இக்கோயில்களில் நூற்றாண்டுகள் பழமையான ஐம்பொன் சிலைகள் உள்ளன. இதற்கு வெளிநாடுகளில் மவுசு அதிகம் என்பதால் சமூக விரோதிகள் சிலர் சிலைகளை கொள்ளையடித்து வருவதாக தெரிகிறது. இதுபோன்று, மாநிலத்தின் பல கோயில்களில் கற்சிலை, உலோக திருமேனிகள் காணாமல் போனதாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளன. இந்த புகாரின் மீது ஒரு சில சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற சிலைகளை மீட்கும் நடவடிக்கையில் அறநிலையத்துறை இறங்கியுள்ளது. இதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், வெளிநாடுகளில் கடத்தி செல்லப்பட்ட சிலைகளை கண்டறிந்து மீட்கும் பணியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, கோயில்களில் தற்போதுள்ள சிலைகளை பாதுகாக்கும் வகையில் சிலை பாதுகாப்பு அறைகளை கட்ட இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இந்த பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ஒரு கோயிலுக்கு ரூ.10 லட்சம் வீதம் 3,087 கோயில்களுக்கு பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ரூ.308.70 கோடி நிதி கடந்த ஆட்சி காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், சிலை பாதுகாப்பு அறைகள் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின் பேரில் ஆணையர் குமரகுருபரன் சிலைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, சென்னை கோடம்பாக்கம் புலியூர் பரத்வாஜேஸ்வரர் கோயிலில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறையை அமைச்சர் சேகர்பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

 மீதமுள்ள கோயில்களில் சிலை பாதுகாப்பு அறைகளை கட்டுவதற்கு ஆய்வு நடத்தி மதிப்பீடுகளை தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, துறையின் பொறியாளர்கள் மூலம் ஆய்வு நடந்து வருகிறது. மேலும், ஆய்வு செய்து முடிக்கப்பட்ட கோயில்களில் மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகிறது. அனைத்து பணிகளையும் முடித்து விரைவாக சிலை பாதுகாப்பு அறைகளை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: