×

தமிழகத்தில் முதல்முறையாக ஊட்டியில் மண் சரிவை தடுக்க ஹைட்ரோ சீடிங் தொழில்நுட்பம் அறிமுகம்: அமைச்சர் எ.வ. வேலு துவக்கி வைத்தார்

ஊட்டி: நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் புதிய தொழில்நுட்பத்துடன் நிலச்சரிவை தடுக்கும் பசுமை தொழில்நுட்ப முறைகளான சணல் வலை அமைத்தல் மற்றும் ஹைட்ரோ சீடிங் எனப்படும் நீர் விதைப்பு முறை மேற்கொள்ளும் புதிய தொழில்நுட்ப முறை தமிழகத்திலேயே முதல் முறையாக ஊட்டியில் உள்ள கோடப்பமந்து பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஊட்டியில் துவக்கி வைத்தார். பின்னர்  அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: மலைப்பகுதியில் உள்ள சாலைகளில் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க ஹைட்ரோ சீடிங் எனப்படும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக மழை பெய்கிறது. இதனால், மண் சரிவு ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவே இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 284 இடங்களில் மண் சரிவு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு சாயில் நெய்லிங் எனப்படும் மண் அரிப்பு அகற்றும் ஆணி அமைக்கப்படும் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் மூலம் மலையின் மேற்பரப்பின் சாய்வு தளத்தை வலுபடுத்த மண் ஆணி அமைக்கப்பட்டுகிறது. தொடர்ந்து, ஜியோ சிந்தடிக் பயன்படுத்தப்படுகிறது. மண் அரிப்பை தடுக்க ஹைட்ரோ சீடிங் எனப்படும் விதைப்பு முறை மேற்கொள்ளப்படும். மண் வலிமையை உறுதி செய்ய, சரிவைத் தடுக்க ஜியோகிரிட் மூலம் மண் ஸ்திரத்தன்மையை அதிகப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், செங்குத்தான மலைசரிவுகள் மற்றும் அதிக மழைப்பொழிவு உள்ள பகுதிகளை பசுமையாக்குதல் முறையில் நிலச்சரிவை கட்டுப்படுத்துதல், சரிவுகளை கட்டுப்படுத்த மேற்கண்ட முறைகளை பரீட்சார்த்த முறையில் ஊட்டி கோத்தகிரி சாலையில் கோடப்பமந்து மற்றும் கட்டபெட்டு அருகில் பாக்கிய நகர் ஆகிய இரு இடங்களில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இது நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும். இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், தமிழகத்தில் மலைப்பகுதிகளாக உள்ள கொடைக்கானல், ஏற்காடு மற்றும் போடிமெட்டு ஆகிய பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் கான்கிரீட் கட்டிடம் கட்டுவதை விட செலவு குறையும், என்றார்.



Tags : Tamil Nadu ,Minister ,A. V.V Velu , Introduction to Technology: Minister E.V. வேலு துவக்கி
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...