கமுதி அருகே சந்தனக்கூடு விழாவில் களிகம்பு நடனமாடி அசத்திய இளைஞர்கள்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் இன்று அதிகாலை சந்தனக்கூடு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பள்ளிவாசல், தர்ஹா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும், இந்த விழாவில் ஊர் பள்ளிவாசலில் இருந்து சந்தனக்கூடு துவங்கியது. விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு இரவு முழுதும் கிராம வீதிகளில் வலம் வந்து அதிகாலை தர்ஹாவுக்கு வந்து அடைந்தது. இந்த சந்தனக்கூடு முன்பு கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் ஒன்றுகூடி மேள சத்தம் மற்றும் இறைபாடல் பாட்டுக்கு ஏற்றவாறு தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனம் ஆடி ஊர்வலமாக சென்றனர்.

களிகம்பு  நடனத்தில் சிறப்பு முத்தாய்ப்பாக வட்டமாக நின்று கயிறு பிடித்து ஆடி ஒருவருக்கொருவர் சிக்காத வகையில் கயிறு போல திரித்து பின்னர் கயிறை விரித்தும், களிகம்பு நடனம் ஆடி சந்தனக்கூட்டை வரவேற்று சென்றனர். தற்போதைய காலத்தில் பாரம்பரியத்தை பலர் மறந்து விட்ட போதிலும்,இந்த கிராமத்தினர் பழமை மாறாமல் இந்த களிகம்பு நடனம் அழியாமல் பாதுகாத்தும், இளைய தலைமுறைகளுக்கு கற்றுக் கொடுத்தும், இதனை வளர்த்தும் வருகிறார்கள்.

மேலும் இவ் விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சந்தன கூடுக்கு மலர்கள் கொடுத்து வழிபட்டனர். இக்கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஏராளமானோர்,சென்னையில் வசித்து வந்தாலும், இத்திருவிழாவை முன்னிட்டு வருடா வருடம் அனைவரும் கிராமத்திற்கு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செல்கின்றனர்.

Related Stories: