இந்திய பந்துவீச்சு தாக்குதலை எதிர் கொள்ள தயார்: தென்ஆப்ரிக்க கேப்டன் எல்கர் பேட்டி

செஞ்சூரியன்: இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டி வரும் 26ம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் தென்ஆப்ரிக்க டெஸ்ட் அணி கேப்டன் டீன் எல்கர் அளித்த பேட்டி: இந்திய அணியில் திறமையான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இங்குள்ள ஆடுகளம் மற்றும் சீதோஷ்ண நிலையை இந்திய பவுலர் ஒருவரால் நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றால் அது நிச்சயம் ஜஸ்பிரித் பும்ராவாகத் தான் இருக்கும். இந்தியா உருவாக்கி உள்ள சிறந்த ஆப் ஸ்பின்னர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஒரு தரமான பந்துவீச்சாளர். நாங்கள் அதை கவனத்தில் கொள்வோம், அவருக்கு எதிராக போட்டியிடுவது சவாலாக இருக்கும். ஆனால் தென்ஆப்ரிக்காவில்அவர் ஆதிக்கம் செலுத்துவார் என நினைக்கவில்லை.

இங்குள்ள நிலைமையும், இந்தியாவில் இருந்த நிலைமையும் மிகவும் வேறுபட்டவை. நாம் நமது விளையாட்டுத் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவுக்கு சிறப்பான பந்துவீச்சு வரிசை உள்ளது. நான் முன்பு குறிப்பிட்டது போல், நாங்கள் சிறந்த பந்துவீச்சு தாக்குதலை எதிர்கொள்வோம் என்பதை நினைவில் கொள்வோம். சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலம். எங்கள் சொந்த நிலைமைகளுக்கு மிகவும் பழகிவிட்டோம். அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று நம்புகிறோம். இது கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் இந்தியா பேட்டர்கள் எங்கள் தாக்குதலை எதிர்கொள்வது கடினமாக இருக்கும், என்றார்.

Related Stories: