×

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் இன்று தொடக்கம்: வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ்?

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் ஷெராட்டன் கிராண்ட் ஒயிட்பீல்டு ஓட்டல் வளாகத்தில் உள்ள மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ்,  பாட்னா பைரட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்,  யு மும்பா, பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, புனேரி பால்டன், தெலுங்கு  டைட்டன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.யோத்தா, தமிழ் தலைவாஸ், அரியானா  ஸ்டீலர்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தொடர் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு அனுமதியின்றி போட்டிகள் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் 6 இடம் பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும். முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். மற்ற 4 அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரைஇறுதி வாய்ப்பை பெறும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் தொடர் நடத்தப்படுகிறது. வெளியாட்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 3 போட்டிகள் நடக்கிறது. இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு புல்ஸ்-யு மும்பா, இரவு 8.30 மணிக்கு தெலுங்கு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ், 9.30 மணிக்கு பெங்கால் வாரியர்ஸ்-உ.பி.யோத்தா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழ் தலைவாஸ் அணி புதிய கேப்டன் சுர்ஜித்சிங் தலைமையில் களம்  இறங்குகிறது. சேலம் பிரபஞ்சன் உள்பட இளம்வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.  இதற்கு முன் 3 முறையும் லீக் சுற்றை கூட தாண்டாத தமிழ்தலைவாஸ் இந்த முறை  சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags : Pro ,Kabaddi League ,Tamil Talawas , Pro Kabaddi League begins today with 12 teams participating: Will Tamil Talawas start with victory?
× RELATED பிரான்ஸ் பல்கலை.யில் இருந்து பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வெளியேற்றம்