வெளிநாடுகளில் இருந்து வந்த 82 பேருக்கு ஒமிக்ரான் தொற்று: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் கட்டமைப்பை மேம்படுத்த  ரூ.279 கோடி மதிப்பில் கூடுதலாக 6 மாடி கட்டிடம் மற்றும்  இதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு அடுத்த ஆண்டு இறுதியில் முதல்வர் திறந்து வைப்பார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது, தினமும் சராசரியாக 600 என்ற எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்பட்டாலும் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் அதிக அபாயம் மற்றும் குறைந்த அபாயம் உள்ள வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்கள் ஆகியோரை பரிசோதனை செய்ததில்  104 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 82 பேருக்கு எஸ் ஜீன் டிராப் எனப்படும் ஒமிக்ரான் வகையின் முதல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். இவர்களது மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது நாளைக்குள் முடிவுகள் வெளியாகும்.

இதுவரை 13 பேரது முடிவுகளை பெங்களூரு ஆய்வகம் அனுப்பி உள்ளது. அதில் ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான், 8 பேருக்கு டெல்டா என முடிவுகள் வந்துள்ளது. குறைந்த அபாயம் உள்ள நாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அனைத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியதற்கு  மத்திய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை. பண்டிகை காலம் வர உள்ளதால் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

வரும் ஞாயிறன்று 16வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை 93 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இதில் 60 வயதை கடந்தவர்கள் அதிகம்பேர். எனவே முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தற்போது 669 பேர் டெங்கு பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: