மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓசூரில் இருந்து பெங்களூரு ஓட்டம்?.. தனிப்படையினர் தீவிர தேடுதல்

ஓசூர்: மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பெங்களூரு தப்பியிருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாங்கி தருவதாக 3.30 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் அளித்த புகாரின்படி, ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை கைது செய்ய 6 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் மருமகன்களான ரமணா, வசந்தகுமார் மற்றும் கார் டிரைவர் ராஜ்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜவர்மன், இன்பதமிழன் உட்பட அதிமுக முக்கிய பிரமுகர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே ராஜேந்திரபாலாஜி உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

அதேநேரத்தில் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ராஜேந்திரபாலாஜி பெங்களூரூவில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதால் தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் அவர் ஓசூரில் பதுங்கியிருந்து பெங்களூருக்கு தப்பியுள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: