×

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றாமல் திருமண வயதை உயர்த்தும் மசோதாவுக்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு..!

சென்னை: பெண்களின் திருமண வயதை 21-ஆகி உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியதாவது: பெண்களுக்கான திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதா ஒன்றை இந்திய ஒன்றிய அரசு மக்களவையில் நேற்று அறிமுகப்படுத்தியது. அதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் அறிமுக நிலையிலேயே கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. உடனடியாக அந்த மசோதா சட்டமாகும் ஆபத்து இல்லை என்றாலும்  அதை முற்றாகக் கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

பெண்களின் உடல் நலன்களுக்காகவும்  அவர்களது முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்புக்காகவும் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என பாஜக அரசு கூறினாலும், இதன் நோக்கம் இந்தியாவில் பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வருவதுதான்  என தெரியவருகிறது. தற்போது ஒவ்வொரு மதத்தினருக்கும் தனிநபர் சட்டங்கள் உள்ளன. திருமணம், வாரிசுரிமை போன்றவற்றை அந்த சட்டங்களே தீர்மானிக்கின்றன. இஸ்லாமியர்களைப் பொருத்தமட்டில் பருவமடையும் வயதையே திருமண வயதாக தனிநபர் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர். குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தில் பெண்களின் வயது 18 என இப்போது இருந்தாலும் அது முஸ்லிம்களின் தனிநபர் சட்டத்தை பாதிக்காது.

இந்தியாவில் ஒரு பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்பது ஆர்எஸ்எஸ், பிஜேபி - சங்கப் பரிவாரத்தின் முதன்மையான நோக்கங்களுள் ஒன்றாகும்.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது; காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை ரத்து செய்வது; பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவது ஆகிய மூன்றையும் தமது முதன்மையான இலக்குகளாக அவர்கள் கூறி வருகின்றனர்.  அதில் இரண்டு இலக்குகளை அவர்கள் அடைந்துவிட்டனர். மூன்றாவதாக இருப்பது பொது சிவில் சட்டம் என்பதுதான். அதற்கான முதல் படிதான் இந்த திருமண வயது திருத்தச் சட்டமாகும்.

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் பாஜக அரசு, பெண்களின் திருமண வயதை உயர்த்துவதன் மூலம் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. உலகில் 100 நாடுகளுக்கு மேல் பெண்களின் திருமண வயது 18 ஆகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இங்கே அதை உயர்த்துகிறோம் என்று மோடி அரசு சொல்வது நல்ல நோக்கத்தில் அல்ல. 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மனம் ஒப்பி உறவில் ஈடுபட்டாலும்,  திருமணம் செய்து கொண்டு கணவருடன் பாலுறவு கொண்டாலும் அதை வன்புணர்வு என்று சட்டம் கூறுகிறது.  போஸ்கோ வழக்குகளில் இத்தகைய திருமணங்கள் தொடர்பான வழக்குகளே அதிகம் பதிவாகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. ‘பொது சிவில் சட்டத்தை  கொண்டுவருவதே நோக்கம்’ திருமண திருத்த சட்டத்திற்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு..!

திருமண வயதை உயர்த்துவதால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதற்கு மாறாக நல்ல தரமான இலவசக் கல்வியை வழங்குவதற்கும், படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுங்கள்’ என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இந்தச் சூழலில் மோடி அரசு தான்தோன்றித்தனமாக, மாநில அரசுகளின் கருத்தையும் அறியாமல் இப்படியொரு சட்டத்தை இயற்றுவது முஸ்லிம்களை குறிவைத்துதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அத்தகைய தீய உள்நோக்கம் கொண்ட இந்த சட்ட மசோதாவை நிலைக்குழு நிராகரிக்குமென நம்புகிறோம். அதேவேளையில், இந்திய ஒன்றிய அரசு இதனை முற்றாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thirumavalavan , Women's reservation, age of marriage, Thirumavalavan, opposition
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு