×

மஞ்சூரில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் புதிய பள்ளி கட்டிடத்திற்கு மாணவர்கள் மாற்றம்

மஞ்சூர் :  மஞ்சூர் மின்வாரிய மேல்முகாமில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் பழுதடைந்த கட்டிடத்தில் இருந்து புதிய கட்டித்திற்கு மாணவர்கள் மாற்றப்பட்டனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல்முகாமில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், குறைந்த இடப்பரப்பில் ஒரே கூரையின் கீழ் பள்ளி இயங்கி வந்தது. இதனால், இடப்பற்றாக்குறை காரணமாக ஆசிரியர்களும், மாணவர்களும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதைத்தொடர்ந்து, பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது குறித்து அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து டி.கே.ரங்கராஜன் தனது தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து பள்ளி கட்டிடம் கட்ட ரூ.15 லட்சம் ஒதுக்கினார்.

அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகளுடன் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டன. இதேபோல், எஸ்.ஏ.டி.பி. திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பீட்டில் மேலும் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன.வகுப்பறை கட்டிட பணிகள் முடிந்து இரண்டு மாதங்களுக்கும் மேலான நிலையில் இதுவரை கட்டிடங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

 இதனால், பழைய கட்டிடத்திலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளி கட்டிடத்தின் மேற்புற கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும், உட்புற சுவரிலும் விரிசல் ஏற்பட்டது. நல்லவேளையாக இடிபாடுகள் பள்ளியின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில் விழுந்ததால் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

இது குறித்து பள்ளி தலைமையாசிரியை ஜெயந்தி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் அலியார் மற்றும் தாலுகா குழு உறுப்பினர் சுப்ரமணி, சிஐடியூ தலைவர் முரளிதரன் உள்ளிட்டோர் சென்று இடிபாடுகளை பார்வையிட்டனர்.

மாணவர்கள் நலன் கருதி புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.  இதைத்தொடர்ந்து, நேற்று காலை புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டு அங்கு மாணவர்கள் மாற்றப்பட்டனர். மேலும், கிராம நிர்வாக அலுவலர் லதா மற்றும் வருவாய்துறையினர் பள்ளிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தற்போது, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரங்கராஜன் ஓதுக்கிய தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் மட்டுமே திறக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில், குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மற்ற வகுப்புகளை சேர்ந்த பெரும்பாலான மாணவர்களும் திண்ணைகளில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. இதனால், எஸ்.ஏ.டி.பி திட்டத்தில் கட்டப்பட்ட மற்றொரு வகுப்பறை கட்டிடத்தையும் உடனடியாக திறக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Manchur , Manzoor: Students were shifted from the dilapidated building of the Government Primary School in Manzoor Minwariya Upper Camp to the new building.
× RELATED மஞ்சூரில் ரேஷன் கடை ஊழியர் வீட்டில்...