நடப்பு நிதியாண்டில் கடத்தல் தங்கம் பறிமுதலில் சென்னை விமான நிலையம் முதலிடம்!: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: நடப்பு நிதியாண்டில் நாட்டிலேயே சென்னை மற்றும் கோழிக்கோடு விமான நிலையங்களில் தான் அதிக அளவில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கேட்ட  கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த நிர்மலா சீதாராமன் இதனை தெரிவித்துள்ளார். பொதுவாக இந்தியாவில் சென்னை, கோழிக்கோடு, திருச்சி, கொச்சின் ஆகிய விமான நிலையங்கள் மூலமாக அதிகளவில் தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதில் நடப்பு நிதியாண்டில் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், சென்னை விமான நிலையத்தில் மட்டும் 130 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். 2ம் இடத்தில் உள்ள கோழிக்கோட்டில் 28 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மிகப்பெரிய விமான நிலையமான டெல்லியிலும், சிறிய விமான நிலையமான திருச்சியிலும் தலா 78 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

கடந்த நிதியாண்டில் கொரோனா பரவலால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட போதும் சென்னையில் 151 கிலோவும், கோழிக்கோட்டில் 147 கிலோவும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதனிடையே 2019 - 20ம் நிதியாண்டில் மட்டும் நாடு முழுவதும் அனைத்து மார்க்கங்களிலும் சேர்த்து 642 கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கூறியுள்ளது. ஆனால் இந்த பறிமுதல் மொத்த தங்க கடத்தலில் சிறு புள்ளிதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: