டெல்லி: சுங்க கட்டண வருவாய் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டிற்கு 1 லட்சத்து 46 ஆயிரம் கோடியாக உயரும் என ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தற்போது சுங்க கட்டணம் மூலம் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருவதாக தெரிவித்தார். நாட்டில் போக்குவரத்து அடர்த்தி ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறினார். மேலும் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் சுங்க கட்டண வருவாய் ஆண்டிற்கு 1 லட்சத்து 46 ஆயிரம் கோடியாக உயரும் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.