விக் தலைமுடிக்குள் ப்ளூ டூத்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பட பாணியில் எஸ்.ஐ. தேர்வில் பிட் அடித்து வசமாக சிக்கிய உ.பி. இளைஞர்..!!

லக்னோ: பரீட்சைகளில் பிட் அடிப்பது குற்றம் தான் என்றாலும் தங்களது மாணவ பருவத்தில் பலர் அதில் சகலகலா வல்லவர்களாகவே இருந்துள்ளனர். பிட் அடிப்பதில் புது டெக்னீக்கை உலகிற்கு அறிமுகப்படுத்தியது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படம் எனலாம். அதேபாணியில் பிட் அடித்து சிக்கியுள்ளார் இந்த உ.பி. இளைஞர். உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் காவல் உதவி ஆய்வாளருக்கான தேர்வுக்கு வந்த இளைஞர் ஒருவர், தேர்வறையில் மிகவும் ஆர்வமாக பரீட்சை எழுதி கொண்டிருந்தார். ஆனால் அந்த இளைஞரின் தலைமுடி இயல்பை விட மிக அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதித்தபோது அது விக் என்பது தெரியவந்தது.

அதற்குள் ப்ளூ டூத்தை பொருத்தி இருந்த அந்த இளைஞர், தனது இரண்டு காதுகளிலும் மிகச்சிறிய அளவில் இயர் போன்களையும் வைத்திருந்தார். வெளியில் இருந்து யாரோ சிலர் இவருக்கு தகவல்களை அளித்துக் கொண்டிருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து அந்த இளைஞர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த விடியோவை ட்விட்டரில் பல ஆயிரம் பேர் கண்டு ரசித்து வருகின்றனர். சிலர் இந்த இளைஞர் சைபர் கிரைம் பிரிவுக்கு சிறந்த பணியாளர் என்றும் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories: