ஆவடியில் உள்ள படைத்துறை உடைத்தொழிற்சாலையில் வைரவிழா ஆண்டு கொண்டாட்டம்

ஆவடி: ஆவடியில் உள்ள பாதுகாப்புத்துறை நிறுவனமான படைத்துறை உடைத்தொழிற்சாலையில் வைரவிழா கொண்டாடப்பட்டது. ஆவடியில் 1961ம் ஆண்டு பாதுகாப்புத்துறை நிறுவனமான படைத்துறை உடைத்தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. இதனை அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் வி.கே.கே.மேனன் தொடங்கிவைத்தார். இந்த நிறுவனத்தில் 1600 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் முப்படைக்கு தேவையான குளிர்கால ஆடைகள், போர் சீருடைகள், அபாயகட்ட சீருடைகள், பாராசூட், கூடாரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இந்நிறுவனம் சமீபத்தில் கார்ப்பரேஷனாக மாற்றப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் டிரூட் கம்போர்ட்ஸ் லிமிட்டெடின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த படை உடை தொழிற்சாலை தொடங்கி நேற்றுடன் 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து அதன் வைரவிழா தொழிற்சாலை வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் டிரூட் கம்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பொது மேலாளர் சந்தோஷ்குமார் சின்ஹா முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். வைரவிழாவை முன்னிட்டு நினைவுத்தூண் திறந்து வைக்கப்பட்டது. மேலும் விழாவில் கேக்வெட்டி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இத்துடன் குழந்தைகள் காப்பகம், ஆராய்ச்சி மற்றும் மாநாட்டு மண்டபம், வி.கே.கே. மேனன் திருமண மண்டபம் மற்றும் பொதுநிகழ்வு மண்டபம் துவங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் படைத்துறையின் உடைத்தொழிற்சாலை பொதுமேலாளர் ஸ்ரீசுர்ஜித்தாஸ் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: