அதிகாரிகள் சோதனைக்கு பயந்து டாய்லெட்டில் வீசப்பட்ட தங்கம் தோண்டி எடுப்பு: திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு

திருச்சி: திருச்சிக்கு நேற்றுமுன்தினம் இரவு துபாயில் இருந்து ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்கள், உடமைகளை இமிகிரேசன் மற்றும் வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனை முடிந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகரன்(25) என்ற பயணி வெளியே வந்தார். அப்போது பயணிகள் வருகை பகுதியில் நின்ற 2 ஆசாமிகள் பிரபாகரனிடம் தங்கம் எங்கே என கேட்டு மிரட்டினர். இதனால் பயந்து போன அவர் மீண்டும் விமான நிலையத்துக்குள் ஓடி சென்று அதிகாரிகளிடம் 2பேர் தங்கம் கேட்டு மிரட்டுவதாக கூறினார்.

இதை பார்த்த அவர்கள் தப்பிவிட்டனர். சந்தேகமடைந்த அதிகாரிகள் பிரபாகரனிடம் விசாரித்தபோது துபாய் விமான நிலையத்தில் 2 பேர், 4 பொட்டலங்கள் மற்றும் பணத்தை கொடுத்து திருச்சி ஏர்போர்ட்டில் 2 பேர் நிற்பார்கள். அவர்களிடம் கொடுக்கும்படி கூறினர். பணத்துக்காக ஆசைப்பட்டு பொட்டலங்களை எடுத்து வந்ததாகவும், அதிகாரிகள் சோதனைக்கு பயந்து வெஸ்டன் டாய்லெட்டில் வீசியதாகவும் கூறினார். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், பிரபாகரன் கூறிய வெஸ்டன் டாய்லெட்டை பெயர்த்து எடுத்து பள்ளம் தோண்டி பார்த்த போது அதில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கம் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக பிரபாகரனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: