×

நடிகை ஹம்சா நந்தினிக்கு மார்பக புற்றுநோய் ஆபரேஷன்

ஐதராபாத்: பிரபல நடிகைகள் மனீஷா கொய்ராலா, சோனாலி பிந்த்ரே, லிசாரே, கவுதமி, மம்தா மோகன்தாஸ் ஆகியோரை போல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தெலுங்கு நடிகை ஹம்சா நந்தினி (37), தற்போது அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக அறிவித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தவர், ஹம்சா நந்தினி. தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியும், முக்கிய கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். ‘நான் ஈ’, ‘ஜெய் லவகுசா’, ‘லெஜன்ட்’, ‘ருத்ரமாதேவி’, ‘பெங்கால் டைகர்’ உள்பட பல படங்களில்  நடித்துள்ள ஹம்சா நந்தினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்ட பிறகு தலைமுடி இல்லாத தனது கருப்பு, வெள்ளை போட் ேடாவை பதிவிட்டுள்ளார். அதில் அவர், தான் மார்பக புற்றுநோயுடன் போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான், அந்த நோயை எதிர்த்துப் போராடி வருகிறேன். வாழ்க்கை எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தாலும், அதற்காக நான் தலைவணங்க மாட்டேன். பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை அனுமதிக்க மாட்டேன். நான் கைவிடப்பட மாட்டேன் என்று நம்புகிறேன். அன்புடனும், தைரியத்துடனும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். 4 மாதங்களுக்கு முன்பு என் மார்பகத்தில் சிறிய கட்டி உருவானது. மருத்துவர்களிடம் ஆலோசித்தபோது, எனக்கு ஏற்பட்டிருப்பது மார்பக புற்றுநோய் என்று சொன்னார்கள். அப்போதுதான் இனி என் வாழ்க்கை ஒரேமாதிரியாக இருக்காது என்று புரிந்துகொண்டேன்.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு என் அம்மா இறந்தார். அன்றிலிருந்து நான் அவரது நிழலில் வாழ்ந்து வருகிறேன். தற்போது நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டுள்ளது. இதுவரை 9 கீமோதெரபி சுழற்சிகள் முடிக்கப்பட்டுள்ளன. எனது நோய் பற்றி விரைவில் கண்டறிந்து உடனே அறுவை சிகிச்சை செய்துகொண்டதாலும், மேற்கொண்டு நோய் பரவல் இல்லாத காரணத்தாலும் விரைவில் குணமடைந்து வருகிறேன். 9 நிலைகளாக நடைபெற உள்ள கீமோதெரபி சிகிச்சையில், இன்னும் 7 நிலைகள் நடைபெற உள்ளது. விரைவில் நான் குணமடைந்து, தற்போது இருப்பதைவிட இன்னும் பலமாகவும், உறுதியாகவும் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்துவேன்.
இவ்வாறு ஹம்சா நந்தினி கூறியுள்ளார். விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Tags : Hamza Nandini , Actress Hamza Nandini undergoes breast cancer operation
× RELATED நடிகை ஹம்சா நந்தினிக்கு மார்பக புற்றுநோய் ஆபரேஷன்