×

நீட் தேர்வு விலக்கு, லக்கிம்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் திமுக, எதிர்க்கட்சிகள் பேரணி

புதுடெல்லி: லக்கிம்பூர் விவகாரத்தில் இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும், நீட் தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க வேண்டும் என, ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் நேற்று நாடாளுமன்றத்தில் பேரணி நடத்தின. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்பப்படும் மக்கள் பிரச்னைகளை விவாதிக்க ஒன்றிய அரசு அனுமதிப்பதில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், லக்கிம்பூரில் விவசாயிகள் காரை மோதி கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரியும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தின் காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரையில் நேற்று பேரணியாக சென்றனர்.

இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுனா கார்கே, திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், திமுக தரப்பில் எம்பி.க்கள் திருச்சி சிவா, ராஜேஷ் குமார் மற்றும் எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசால் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்,’’ என்றார். திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில், ‘‘தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பது தொடர்பாக மக்களவையில் திமுக, கூட்டணி கட்சி எம்பி.க்கள் குரல் எழுப்பினோம். இதற்கு சட்ட ரீதியாக தீர்வு காண, அனைத்து வகையிலும் வழிவகை செய்வோம்,’’ என்றார்.

Tags : Dimuka ,Lakimpur ,Parliament , NEET EXAMINATION, LUCKYMPUR ISSUE DMK, Opposition Rally in Parliament
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...