மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு பெண்கள் திருமண வயது மசோதா நாடாளுமன்ற குழுவுக்கு பரிந்துரை

புதுடெல்லி: பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, விரிவான ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அது அனுப்பப்பட்டது. பெண்களின் சட்டப்பூர்வமான குறைந்தப்பட்ச திருமண வயதாக தற்போது 18ம், ஆண்களுக்கு 21 ஆகவும் உள்ளது. இந்த குறைந்த வயதில் பெண்களுக்கு திருமணம் செய்வதால் அவர்களின் படிப்பு இடையில் கைவிடப்படும் சம்பவங்கள், நாடு முழுவதும் அதிகளவில் நடக்கின்றன. மேலும், போதுமான உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து குறைபாடுகளால்  மகப்பேறுவின் போது அதிக இறப்புகள், உடல்நிலை பாதிப்பு போன்றவைகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையில், கடந்தாண்டு சுதந்திர தினத்தில் ஆற்றிய உரையின்போது, பெண்களின் திருமண குறைந்தப்பட்ச வயதை உயர்த்தப் போவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு, சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இது, கடந்த சில வாரங்களுக்கு முன் அளித்த அறிக்கையில், ஆண்களுக்கு இணையாக பெண்களின் திருமண வயதையும் 21 ஆக உயர்த்தும்படி பரிந்துரை செய்தது. இதற்கு, ஒன்றிய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஆனால், பெண்ணின் திருமண வயது வரம்பை உயர்த்தக் கூடாது என மத ரீதியான சில அமைப்புகளும், கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான ‘குழந்தைகள் திருமண தடை திருத்த மசோதா -2021’ஐ,  மக்களவையில் ஒன்றிய பெண்கள் நலம் மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டன. மசோதாவை நாடாளுமன்ற நிலை குழுவின் விரிவான ஆலோசனைக்கு அனுப்பும்படி வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, மசோதாவை நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அனுப்பும்படி சபாநாயகர் ஓம் பிர்லாவை  ஸ்மிருதி இரானி கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற ஓம் பிர்லா, மசோதாவை அக்குழுவுக்கு அனுப்பினார். இனிமேல், அனைத்து கட்சி எம்பி.க்கள் அடங்கிய இந்த குழு, இந்த மசோதாவை முழுமையாக ஆய்வு செய்து, அளிக்கும் பரிந்துரைகளும், திருத்தங்களும் மசோதாவில் சேர்க்கப்பட்டு, மீண்டும் அது அவையில் தாக்கல் செய்யப்படும். ஆனால், அதற்கு எவ்வளவு காலமாகும் என்பது தெரியாது.

Related Stories: