சட்ட விரோதமாக செயல்படும் ‘கிளப்பு’களின் பதிவை ரத்து செய்வது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறை வெளியீடு; பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் நடவடிக்கை

சென்னை:  சட்ட விரோதமாக செயல்படும் கிளப்புகளின் (சங்கங்களின்) பதிவை ரத்து செய்வது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறை வெளியிட்டு பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம். 1975ன் கீழ் பதிவு செய்யப்பட்ட  பொழுதுபோக்கு சங்கங்கள்/மனமகிழ் மன்றங்கள் ஆகியவை காலமுறைப்படி மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) அல்லது சீட்டு மற்றும் சங்க சார்பதிவாளர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும். இத்தகைய ஆய்வின்போது சங்கத்தின் செயல்பாடுகளில் சட்டவிரோதமான ஏதும் கண்டறியப்பட்டால் சங்கப்பதிவு சட்டம் பிரிவு 38ன் கீழ் உரிய வழிமுறைகளை பின்பற்றி சங்கப்பதிவினை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவற்றின்படி, சங்கப் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சங்கத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் நிகழ்வது குறித்து சங்கப்பதிவாளருக்கு தெரிய வரும் நிகழ்வில், அச்சட்ட விரோத செயல்பாடுகள் குறித்த விசாரணை ஒன்று சங்கப்பதிவாளரால் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்விசாரணையின் முடிவில் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் மேற்கொள்ளப்படுகிறது என சங்க பதிவாளர் கருதுவரேனால் அச்சங்கத்தின் பதிவை ஏன் நீக்கம் செய்யக்கூடாது என்று காரணம் காட்டுமாறு அந்தச் சங்கத்திற்கு அறிவிப்பைக் கொடுக்கப்பட வேண்டும்.

இந்த காரணம் காட்டும் அறிவிப்புக்கு சங்கத்தினரிடமிருந்து உரிய பதில் பெறப்படும் நிகழ்வில் அதனை பரிசீலினை செய்து அதன் அடிப்படையில் சங்கத்தின் பதிவு நீக்கம் தொடர்பாக உரிய ஆணை சங்கப்பதிவாளரால் பிறப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஆணையினை பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். சங்க பிரிவு 38ன் படி மேற்கொள்ளப்படும் சங்கப்பதிவு ரத்து குறித்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்கு கடித மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். பொழுதுப்போக்கு / மனமகிழ் மன்றங்களாக பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்களை பொறுத்த வரை சார்பதிவாளர் (சீட்டு மற்றும்  சங்கம்) 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்ளலாம்.

சங்கப்பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டுள்ள பொழுதுப்போக்கு / மனமகிழ் மன்றங்கள் குறித்து காவல் துறையினரிடம் இருந்து புகார் அல்லது முதல் தகவல் அறிக்கை நகல் பெறப்படும் நிகழ்விலும் இந்த வழிமுறைகளை அனுசரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பொருள் குறித்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள் தங்களது மண்டலங்களுக்குட்பட்ட மாவட்டப்பதிவாளர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளை மாதாந்திர கூட்டங்களின் போது ஆய்வு செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: