×

கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகாலம் பணியாற்றிய சண்முகநாதன் காலமானார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி

சென்னை: மறைந்த முதல்வர் கலைஞரின் நிழல் என்று அன்போடு அழைக்கப்பட்ட, 50 ஆண்டுகால உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். மறைந்த சண்முகநாதனுக்கு யோகாம்பாள் என்ற மனைவியும், 2 மகன், ஒரு மகள் உள்ளனர். தமிழகக் காவல்துறையில் தமிழ் சுருக்கெழுத்து நிருபராக பணியை தொடங்கியவர் சண்முகநாதன். எதிர்க்கட்சித் தலைவர்களின் பொதுக்கூட்டங்களுக்கு சென்று அவர்களின் பேச்சை சுருக்கெழுத்தில் குறிப்பு எடுத்து அதை அதிகாரிகளுக்கு தட்டச்சு செய்து அனுப்பும் வேலை அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. 1967ம் ஆண்டு அண்ணாவின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில்  பொதுப்பணித்துறை அமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தார்.

அப்போது, காவல்துறை வேலையிலிருந்து தமிழகச் சட்டமன்ற மேலவையில் தமிழ்ச் சுருக்கெழுத்தாளராக தனது பணியை சண்முகநாதன் மாற்றி கொண்டார். அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கலைஞர் தமிழகத்தின் முதலமைச்சராக  பதவியேற்றார். அப்போது கலைஞர் அவரை  தனது தனிப்பட்ட உதவியாளராக 1969ம் ஆண்டு பிப்ரவரியில் நியமித்தார்.  அன்று முதல் கலைஞர் கருணாநிதி மறைவு வரை சுமார் 50 ஆண்டுகள் அவருடனேயே அவரது நிழலாக வலம் வந்தவர். கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர் சண்முகநாதன். கலைஞரின் நிழல் என்று குறிப்பிடும் அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்தவர் சண்முகநாதன்.‘பேராசிரியர் க.அன்பழகன், ‘என் போன்றோரின் மேடைப் பேச்சுகளை நாங்கள் பேசிய ஒரு வார்த்தை கூட மாறாது, அரசுக்கு உளவுத்துறை மூலம் அனுப்பப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்த நான், சண்முகநாதனை பற்றி விசாரித்து வைத்தேன்.

அதற்கு பிறகு, முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவரை என் உதவியாளராக்கி கொண்டேன்’ என, கருணாநிதியே சண்முகநாதன் குறித்து பொது மேடை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அந்த அளவுக்கு கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்து வந்தார் சண்முகநாதன். கருணாநிதியின் மறைவிற்கு பிறகு, மிகுந்த மன உலைச்சலில் இருந்து வந்த சண்முகநாதனுக்கு அவ்வப்போது உடல்நலக் கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் இருந்து சண்முகநாதன் உடல் தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது சண்முகநாதன் உடலை பார்த்து மு.க.ஸ்டாலின் கண்கலங்கினார். இது அங்கு இருந்தவர்களை கண்கலங்க வைத்தது. மேலும் சண்முகநாதன் உடலுக்கு திமுக பொது செயலாளர் துரைமுருகன், மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதே போல சண்முநாதன் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் ைவகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், தி.க. தலைவர் வீரமணி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று உடல் தகனம்: மறைந்த சண்முநாதன் உடல் இன்று மதியம் 3 மணியளவில் மயிலாப்பூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

Tags : Shanmuganathan ,Chief Minister ,MK Stalin , Shanmuganathan, who worked as the artist's assistant for 50 years, has passed away; Tearful tribute to Chief Minister MK Stalin
× RELATED நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு...