×

உழைப்பு, உண்மை, விசுவாசம், அர்ப்பணிப்பின் அடையாளம்; சண்முகநாதனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.!

சென்னை:  உழைப்பு, உண்மை, விசுவாசம், அர்ப்பணிப்பு ஆகிய நான்கின் அடையாளமானவர் சண்முகநாதன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: சண்முகநாதனின் மறைவுச் செய்தி எனக்குத் தீராத மனத்துயரத்தை ஏற்படுத்திவிட்டது. நான் அவரைக் காவேரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தபோது, “அடிக்கடி என்னை எதற்காக வந்து சந்திக்கிறாய். நீ உனது பணிகளைக் கவனி” என்று உரிமையோடு சொன்னார். அத்தகைய அன்புள்ளத்தை இவ்வளவு சீக்கிரமாக இழப்போம் என்று நான் நினைக்கவில்லை. அவரின் திருமணத்திற்காகப் பெண் பார்க்கச் சென்றது, மாப்பிள்ளைத் தோழனாக மணமேடையில் இருந்தது என்று அவருடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். இப்போது அவரை இந்தக் கோலத்தில் பார்க்கும் சூழல் வந்துவிட்டதே.
உதவியாளர், செயலாளர் என்பதையெல்லாம் தாண்டி கலைஞரின் நிழலாக இருந்தவர். கலைஞருக்கு இன்னொரு கையாக இருந்தவர்.

சுமார் 50 ஆண்டுகாலம் கலைஞரோடு பயணித்தவர் அவர். அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரைக்கும் கோபாலபுரம் வீட்டிலேயே இருப்பார். கோபாலபுரம் வீட்டிற்குள் நுழைந்ததும் வலதுபுறம் அவரின் அறை இருக்கும், அங்குள்ள கணினி முன் அமர்ந்து எப்போதும் வேலை செய்துகொண்டே இருப்பார். தலைவரைப் பார்க்க கழக முன்னோடிகள் வந்தாலும், நானும் அவரும் அந்த அறையில்தான் இருப்போம். தலைவர் கலைஞரை பிரிந்து அவராலும் இருக்க முடியாது. அவரைப் பிரிந்து தலைவராலும் இருக்க முடியாது என்பதுதான் உண்மை. தலைவர் கலைஞர் மறைந்த பிறகும், அவர் இருந்த காலத்தில் கோபாலபுரம் வீட்டுக்கு எப்படி வருவாரோ அதேபோல் வந்து எழுதுவது, அச்சிடுவது, மெய்ப்புத் திருத்தம் செய்வது என இருப்பார்.

கலைஞர்  எழுதிய அனைத்துக் கடிதங்களையும் பல்வேறு தொகுதிகளாகத் தொகுத்து வெளியிடும் அரிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவை அனைத்தும் அச்சில் இருக்கும் நிலையில் சண்முகநாதன் மறைந்தது அதிர்ச்சியடைய வைக்கிறது. கலைஞரின் வரலாற்றின் அனைத்துப் பக்கங்களையும் எழுதும் தகவல் களஞ்சியம் அவர். அரை நூற்றாண்டுகால தமிழக அரசியலை முழுமையாக அறிந்த வரலாற்றுப் புத்தகம். அனைத்துக்கும் மேலாக எங்களது கோபாலபுரக் குடும்பத்தின் ஒரு முக்கியமான தூண் சரிந்துவிட்டது. எங்கள் குடும்பத்தில் எல்லோரும் அவரை ‘குட்டி பி.ஏ.’ என்றுதான் அழைப்போம். இருப்பவர்களிலேயே அவர்தான் வயதால் இளைஞர் என்பதால் அப்படி அழைப்போம். இன்று எங்கள் அனைவருக்கும் மூத்த அண்ணன் நிலையில் இருந்தார்.

தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு இது. ‘இந்தப் பிறவி தலைவருக்கானது’ என வாழ்ந்த பாசச் சகோதரனை இழந்திருக்கிறோம். ‘அவர் இல்லாமல் நான் இல்லை’ என்று வாழ்ந்த அன்புமனிதரை இழந்திருக்கிறோம். தன் குடும்பம் மறந்து, எங்கள் குடும்பத்துக்காக உழைத்த தியாகியை இழந்திருக்கிறோம். யாருக்கு நான் ஆறுதல் சொல்வது? என்னை நானே ஆறுதல் சொல்லிக் கொள்ளத்தான் வேண்டும். அண்ணன் சண்முகநாதன் குடும்பத்தினர் அனைவர்க்கும் அக்குடும்பத்தின் சகோதரனாக எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Chief Minister ,MK Stalin ,Shanmuganathan , Symbol of hard work, truth, faith, commitment; Chief Minister MK Stalin praises Shanmuganathan!
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...