கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சென்னை ஆயுதப்படை காவலர் தூக்கு போட்டு தற்கொலை

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், பவர்ஹவுஸ் காலனி 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முஜிப் பாஷா. இவரது மகன் சாதிக் பாஷா (26), 2017ம் ஆண்டு முதல் சென்னை பெருநகர ஆயுதப்படை பிரிவில் 2ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் முதல் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து நண்பர்களான நெப்போலியன், நிரஞ்சன் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவர்களும் காவல் துறையில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி அளவில் நெப்போலியனும், நிரஞ்சனும் பணிக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து இரவு 9 மணி அளவில் இருவரும் வீட்டுக்கு வந்துள்ளனர்.

உள்பக்கம் தாழிடப்பட்டிருந்ததால் கதவை தட்டியுள்ளனர். வெகுநேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த இருவரும் வீட்டின் மாடி வழியாக சென்று பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, சாதிக் பாஷா மின்விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக அவரது உடலை தூக்கில் இருந்து இறக்கி வைத்துவிட்டு தலைமை செயலக காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சாதிக் பாஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில், தற்கொலை செய்துகொண்ட சாதிக் பாஷாவுக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் செல்போனில் தனது நண்பர்களுடன் உடல்நிலை குறித்து பேசியுள்ளார். அதன்பிறகு, எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். அதன்பிறகு மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் தனது அறைக்கு சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்வதற்கு முன் சாதிக்பாஷா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘எனது சாவுக்கு யாரும் காரணமில்லை’ என குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், குடும்ப பிரச்னை காரணமாக சாதிக்பாஷா தற்கொலை செய்தாரா அல்லது நோய் தொற்று காரணமாக தற்கொலை செய்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: