×

அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது: அமைச்சர் ஆர்.சக்கரபாணி பேச்சு

டெல்லி; புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில்  இன்று (21.12.2021) இந்தியா முழுவதும் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டு பேசியதாவது; ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரம்,

 உணவு மற்றும் பொது விநியோகத் திட்டத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் அவர்களுக்கும், பல்வேறு மாநில அமைச்சர் பெருமக்களுக்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசின் அதிகாரிகளுக்கும் இனிய மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நம் நாட்டில் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்படும் நிலையைப் போக்குவதற்காக சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கும் திட்டம் குறித்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன். தமிழ்நாட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை குறிப்பாக சமூகத்தில்  மிகவும் பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரங்கில் பதிவு செய்வதற்கு வாய்ப்பு அளித்தமைக்காக அனைவருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூகப் பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்திட கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. 01.11.2016 முதல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 அமல்படுத்தப்பட்ட நிலையிலும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நிலையினைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது. எங்களது போற்றுதலுக்குரிய தலைவர், அன்றைய மாண்புமிகு முதல்வர்,

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழக மக்களுக்கு சத்தான உணவுப் பொருட்கள் வழங்கும் பொருட்டு ‘சிறப்பு பொது விநியோகத் திட்டம்‘ அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை மானியம் அதிகம் கொடுத்து குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. மேலும், அன்றைய மாண்புமிகு முதல்வர், முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களால் பள்ளிகளுக்கு செல்லும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மதிய உணவு திட்டத்தின் கீழ் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முட்டை வழங்கும் திட்டம் 1989ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  2010ம் ஆண்டில் வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்கும்  வகையில் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது.  

தமிழகத்திலுள்ள கோவில்களில் அன்னதான திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் உத்தேசமாக ரூ.16.50 இலட்சம் செலவில் 66,000 பக்தர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு முழு உணவு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றது. இதுமட்டுமில்லாமல், எங்களது அன்புத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான  அரசு பொறுப்பேற்றவுடன் ரூ.978 கோடி செலவில் 2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகை பொருட்களும் ரூ.4000/- ரொக்க தொகையும் வழங்கப்பட்டன. வருகின்ற 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.1161 கோடி மதிப்பீட்டில் 2.15 கோடி அட்டைதாரர்களுக்கு 20 வகையான உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் சமூக சமையல் கூடங்கள் :
தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. தூய்மையான உணவை மானிய விலையில் ஏழை, எளிய மக்களுக்கும் தேவைப்படுவோர்க்கும் இதன் மூலம் வழங்கி வருகிறது.  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 407 உணவகங்களும், 14 மாநகராட்சிகளில் 105 உணவகங்களும், நகராட்சிகளில் 138 உணவகங்களும், கிராம பஞ்சாயத்துகளில் 4 உணவகங்களும் செயல்படுகின்றன. இந்த எண்ணிக்கையானது பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு உதவும் உதவியாளர்கள் மற்றும் புறநோயாளிகளின் நன்மைக்காக நடத்தப்படும் உணவகங்களையும் உள்ளடக்கியதாகும்.

ஒவ்வொரு உணவகம் மூலமாகவும் சராசரியாக நாளொன்றுக்கு 200 முதல் 400 நபர்களுக்கு முழு உணவு அதிக மானியம் கொடுத்து குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட முழுஊரடங்கு காலத்திலும், இயற்கை பேரிடர்பாடுகள் நேரிடும் காலத்திலும் உணவகத்திற்கு வரும் அனைத்து தரப்பு மக்களுக்கும் முழு உணவு விலையின்றி வழங்கப்படுகின்றது. இந்த உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும், பல்வகை சாதங்கள் (சாம்பார், கருவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாதம் ) 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்குப் பகலிலும், 2 சப்பாத்தி பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் சராசரியாக ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூ.25/- முதல் ரூ.30/- வரை அரசினால் செலவிடப்படுகிறது. தற்பொழுது, இத்திட்டம் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவுயுடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மாநில அரசு மற்றும் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகள் இதற்காக ரூ.300  கோடி செலவு செய்கின்றன. விளிம்பு நிலையிலுள்ள வறியவர்களுக்கு உணவுப் பாதுகாப்பினை சமூக  உணவகங்கள்  மூலமாக உறுதி  செய்திடும்  வகையில்  இதற்கு முந்தைய கூட்டத்தின்பொழுது குறிப்பிட்டவாறு “கலைஞர் உணவகம்“ என்ற பெயரில் மேலும் 500 சமூக உணவகங்களைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும்.

இந்தியா முழுமையும் சேவை வழங்கும் முறையிலான சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கும் திட்டத்திற்கென கீழ்க்காணும் ஆலோசனைகளைத்  தெரிவிக்க விரும்புகின்றேன்.

i)    சமுதாய உணவுக் கூடங்கள் அமைப்பதற்காக  தேவைப்படும் நிலம், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படலாம்,  கட்டிடம், தளவாடச் சாமான்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட மூலதனச் செலவினங்களும் உணவு தானியங்கள் கொள்முதல் பணியாளர் சம்பளம் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து தொடர் செலவினங்களுக்கும் முழுமையாக நூறு சதவிகிதத் தொகை ஒன்றிய அரசினால் வழங்கப்பட வேண்டும்.

ii)    தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பயன்தரக்கூடிய வகையில் இந்த சமூக சமையல் கூடங்கள் செயல்படுகின்றன. வறிய நிலையிலுள்ள தகுதியான நபர்களே அதிகமாக இதன் மூலம் பயனடைகின்றனர் என்பதே எங்களது அனுபவமாகும். எனவே, இத்திட்டத்தில் பயனாளிகளை அடையாளம் காண்பதற்கான அளவுகோல்கள் ஏதும் தேவையில்லை எனக் கருதுகிறேன். மேலும் தமிழ்நாட்டில் உள்ள இதர மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களும் இதன் வாயிலாக தொடர்ந்து பயன்பெற்று வருகிறார்கள்.

iii)    எங்களது அனுபவத்தில் இயற்கைப் பேரிடர் காலங்கள் மற்றும் ஊரடங்கு காலங்களில் குறிப்பிடத்தக்க வகையில் இத்தகைய சமுதாய உணவகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, பயனாளிகளின் எண்ணிக்கை திடீரென உயரும்பொழுது, போதிய உணவு வழங்கும் வண்ணம் இத்திட்டம் போதிய நெகிழ்வுத் தன்மை கொண்டிருக்க வேண்டும்.

iv)    தமிழ்நாட்டில் தற்பொழுது சென்னை மாநகராட்சியில் மூன்று வேளைகளிலும், இதர பகுதிகளில் இரண்டு வேளைகளிலும் உணவு வழங்கப்படுகிறது. எனவே, குறைந்தபட்சம் இருவேளை உணவு சமூக உணவகங்கள் மூலமாக வழங்கப்பட வேண்டும்.

v)    இந்தியா போன்ற பரந்துவிரிந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட முறை அல்லது ஒற்றை முறை அனைத்து பகுதிகளுக்கும் ஏற்புடையதாக அமையாது. எனவே, சமூக உணவகங்களைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்களின் தேவைக்கேற்ப நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய விரிவான விதிமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆலோசனைகள், ஒன்றிய அரசினால் செயல்படுத்தப்படவுள்ள சமுதாய உணவுக் கூடங்களுக்கான திட்டத்தின் அங்கமாக ஏற்பதற்குப் பரிசீலிக்கப்படும் என நான் உறுதிபட நம்புகிறேன்.
தொலைநோக்குப் பார்வையுடன் எங்களது பேரன்பிற்குரிய தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றிய அரசுடனும்,

இதர மாநில அரசுகளுடனும் ஒன்றிணைந்து பசிப்பிணி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதுணை புரிவோம். என்று நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் திரு.முஹமது நசிமுதீன், இ.ஆ.ப., மற்றும் தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்பொருள்  வழங்கல் துறை ஆணையர் திரு.வி.ராஜாராமன், இ.ஆ.ப., உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Tamil Nadu ,Minister ,R.R. Sakarabani , Tamil Nadu is a 'pioneer state' in implementing programs to provide nutritious food to all people: Minister R. Chakrabarty
× RELATED தேர்தல் பத்திரம் குறித்து வாய் திறக்க...