×

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை விவகாரம்; விசாகா கமிட்டி விசாரணையை எதிர்த்த சிறப்பு டிஜிபி மனுமீது ஜன.5ல் இறுதி விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த புகார் தொடர்பான விசாகா குழு விசாரணையை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிராக, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி விசாரணை நடத்த  கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய  விசாகா குழு அமைக்கப்பட்டது.

விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்து அது பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டது. சாட்சிகளின்  வாக்குமூலங்களை கூட தனக்கு வழங்கவில்லை. தற்போதைய விசாகா குழுவை கலைத்துவிட்டு, முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணையில் உள்ளது. விசாகா குழு விசாரணை அறிக்கையும், முடிவுகளும் மூடி முத்திரையிட்ட உறையில் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்தபோது,  விசாகா குழு தீர்ப்பாய அந்தஸ்தில் உள்ளதால் அதை எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாகா குழு மீது மனுதாரர் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். எனவே, அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த  வழக்கை இறுதி விசாரணைக்காக ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். மனுதாரர் மீதான துறை ரீதியான நடவடிக்கையில் தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டுமென்ற உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று  உத்தரவிட்டார்.

Tags : DGB ,Visaka Comitee ,Chennai High Court , Sexual harassment case for female SP; Chennai High Court orders final hearing on Special DGP's petition against visa committee inquiry on Jan. 5
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...