×

அரசு மற்றும் தனியார் பள்ளி பாடநூல்களை தமிழகத்தில் மட்டுமே அச்சிட உத்தரவு: முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில்  பயிலும் மாணவர்களுக்கான 8 கோடி புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் ஒவ்வொரு ஆண்டும் அச்சிட்டு வழங்குகிறது. கடந்த 2018ம் ஆண்டு முதல்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு உலகளாவிய டெண்டரை கொண்டு வந்ததையடுத்து, அச்சிடும் ஆர்டர்களை தமிழக அச்சகத்தினர் இழக்கும் ஆபத்து ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு வெளிமாநிலங்களின் அச்சகத்தாருக்கு  50% தமிழக அச்சகத்தாருக்கு 50% டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழத்தில் உள்ள புத்தகம் அச்சிடும் அச்சகங்கள் மூடும் நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் புத்தகம் அச்சிடுவோர் சங்கமும் பைண்டர்ஸ் சங்கமும் அச்சம் தெரிவித்துள்ளன. மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நிர்வாகத்தை முடுக்கி விட்டு, ஏகோபித்த பாராட்டுகளை  முதலமைச்சர் பெற்று வருகிறார்.

இந்த விஷயத்திலும்  தலையிட்டு தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் அச்சகத்தினரும், அதில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர்.
எனவே, தமிழகத்தில் உள்ள பாடப் புத்தக அச்சகங்களின் கோரிக்கையின் நியாயத்தை ஏற்று, தமிழகத்தில் மட்டுமே பாடநூல்களை அச்சிடும் வகையில் தமிழக முதலமைச்சர் விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,KS Alagiri , Order to print government and private school textbooks only in Tamil Nadu: KS Alagiri urges the first
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...