×

பீகாரில் பழைய இரும்பு வியாபாரிக்கு நீராவி ரயில் இன்ஜினை விற்பனை செய்த ரயில்வே பொறியாளர்

பீகார்: பீகாரில் போலி ஆவணங்கள் மூலம் பழைய நீராவி ரயில் எஞ்சினை ரயில்வே பொறியாளரே விற்பனை செய்தது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தில் உள்ள லோகோ டீசல் செட்டில் பொறியாளராக பணியாற்றி வருபவர் ராஜீவ் ரஞ்சன் ஜா. சமஸ்திபூர் கோட்டத்திற்கு உட்பட்ட பூர்ணியாகோட் ரயில் நிலையத்தில் நீண்ட காலமாக பழைய நீராவி ரயில் எஞ்சின் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதனை போலி ஆவணங்கள் மூலம் பழைய இரும்பு டீலருக்கு ராஜீவ் ரஞ்சன் விற்பனை செய்துள்ளார்.

டிசம்பர் 14ஆம் தேதி ராஜீவ் ரஞ்சன் சில ஊழியர்களின் உதவியுடன் ரயில் எஞ்சினை உடைத்துள்ளார். இதனை பார்த்து சந்தேகமடைந்த அவுட்போஸ்ட் பொறுப்பாளர் எம்.எம்.ரஹ்மான் கேட்டபோது எஞ்சினை உடைத்து செட்டிற்கு அனுப்பும் உத்தரவை அவரிடம் காட்டி இருக்கிறார். செட்டிற்கு ரயில் எஞ்சின் அனுப்பப்பட்டுள்ளதா என சோதித்து பார்த்த ரஹ்மான் எஞ்சினை உடைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்று விசாரித்திருக்கிறார். அதன் பிறகே போலியான ஆவணங்கள் மூலம் நீராவி எஞ்சின் விற்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. மோசடி தொடர்பாக ராஜீவ் ரஞ்சன் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் ராஜீவ் ரஞ்சனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Bihar , Steam locomotive
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!