கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பு!: டி.ஆர்.பாலு, கே.எஸ். அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கண்ணீர் இரங்கல்..!!

சென்னை: மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் கோ.சண்முகநாதன் (80) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் உயிர் மாரடைப்பால் பிரிந்தது. சண்முகநாதன் சுமார் 50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றியுள்ளார். காவல்துறையில் சுருக்கெழுத்தாளராக பணிபுரிந்த சண்முகநாதன், பின்னர் கலைஞரின் உதவியாளராக பணியில் சேர்ந்தார். அபாரமான நினைவாற்றல் கொண்ட கடின உழைப்பாளியான சண்முகநாதன், கலைஞரின் நிழல் என அழைக்கப்பட்டார்.

கலைஞர் முதலமைச்சராக இல்லாத போதும் அவரது உதவியாளர் பணியில் தொடர்வதற்காக அரசு வேலையை துறந்தார். 1969ம் ஆண்டு பிப்ரவரியில் கலைஞரின் உதவியாளராக சேர்ந்த சண்முகநாதன், கலைஞர் இறக்கும் வரை அவருடனே இருந்தார். இவருக்கும், கருணாநிதிக்கும்  இடையேயான உறவு அவ்வளவு எளிதில்  யாராலும் புரிந்துக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது. கலைஞர் கருணாநிதியை பற்றி  தலை முதல் கால் வரை தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார்.

டி.ஆர்.பாலு இரங்கல்:

கலைஞரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் மறைவுக்கு டி.ஆர்.பாலு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பு. கலைஞர் மீதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் அளவற்ற அன்பு கொண்டவர் உதவியாளர் சண்முகநாதன். உதவியாளர் சண்முகநாதனின் மறைவு தலையில் இடி விழுந்தது போன்ற துயரத்தை அளித்துவிட்டது. தனது பிறந்தநாளன்று சண்முகநாதனுக்கு தான் அணிவித்த பட்டாடைதான் எனது இறுதி மரியாதை என்பது தெரியாமல் இருந்துள்ளேன். சண்முகநாதனை இழந்து வாடுகின்ற அவரது மனைவி, தம்பிகள் அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என டி.ஆர்.பாலு குறிப்பிட்டிருக்கிறார்.

கே.எஸ். அழகிரி இரங்கல்:

திரு. கோ. சண்முகநாதன் அவர்கள் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தி.மு. கழக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நேர்முக உதவியாளர் என்பதால் அன்றைய ஆளுங்கட்சியினரால் நிகழ்த்தப்பட்ட பல அடக்குமுறைகளை துணிவுடன் எதிர்த்து நின்றவர். சோதனையான காலத்திலும் அவருக்கு உற்ற துணையாக இருந்தவர்.

எந்த கருத்தைப் பற்றியும் அறிய வேண்டுமானாலும் எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருக்கக் கூடிய ஆற்றல் பெற்றவராக விளங்கினார். காவல்துறையில் சுருக்கெழுத்தாளராக பணியில் சேர்ந்த இவர், கடும் உழைப்பின் மூலமாக கலைஞர் அவர்களின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக செயல்பட்டவர். சண்முகநாதன் அவர்களை நடமாடும் கருவூலமாக அனைவரும் கருதுவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: