×

லக்கிம்பூர் விவகாரத்தில் அஜய் மிஸ்ராவின் பதவியை பறிக்காதது ஏன்?: டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராகுல்காந்தி தலைமையில் கண்டன பேரணி..!!

டெல்லி: லக்கிம்பூர் கெர்ரி விவசாயிகள் கொலையில் இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் பதவியை பறிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் கண்டன பேரணி நடத்தினர். காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தலைமையில் தொடங்கிய இந்த பேரணி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து தொடங்கியது. விஜய் சவுக் என்ற இடத்தில் இந்த பேரணி நிறைவுபெற்றது. பேரணியின் போது பேசிய ராகுல்காந்தி,  லக்கிம்பூர் கெர்ரி சம்பவம் திட்டமிட்ட சதி என்று சிறப்பு புலனாய்வு குழு கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார். இதில் பிரதமர் மோடி எதுவுமே செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். சம்பவத்திற்கு காரணமாக இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யாதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அப்போது ஒன்றிய அரசை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். இந்த பேரணியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மட்டுமல்லாது திமுக மற்றும் இடதுசாரி உறுப்பினர்களும் பங்கேற்றனர். கடந்த அக்டோபர் 3ம் தேதி உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெர்ரியில் பேரணி சென்ற விவசாயிகள் மீது ஜீப் மோதியது. இதில் 4 பேர் மரணமடைந்தனர். இந்த நிகழ்வின் போது ஜீப்பில் இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தின் உள்ளே இருந்தார். இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பதால் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Tags : Ajay Mishra ,Lakhimpur ,Delhi ,Rahul Gandhi , Lucknow, Ajay Misra, Delhi, Opposition MPs, Rally
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...