×

தங்கச்சிமடத்தில் நாளை மீனவர்கள் உண்ணாவிரதம்; ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக் 2வது நாளாக நீடிப்பு

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்கள், 8 விசைப்படகுகளை விடுவிக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 2வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். நாளை தங்கச்சிமடத்தில் அனைத்து சங்கங்களை சேர்ந்த மீனவர்களின் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும், ஜன.1ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் மீனவர்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாக் ஜலசந்தி கடலில் கடந்த 18ம் தேதி இரவு மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர், மன்னார் வளைகுடா கடலில் நேற்று முன்தினம் மீன் பிடித்து கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் என 55 மீனவர்களை இலங்ைக கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். அனைவரும் விசாரணைக்கு பின்னர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

55 மீனவர்களையும், பறிமுதல் செய்த அவர்களது 8 விசைப்படகுகளையும் விடுவிக்கவும், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் சுமூகமான முறையில் மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ராமேஸ்வரத்தில் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கினர். இதனால் ராமேஸ்வரத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் முன்பு மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் நாளை கடலோர மாவட்ட மீனவர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும், டிச. 31ம் தேதிக்குள் மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படாவிட்டால், ஜன.1ம் தேதி ராமேஸ்வரம் - சென்னை ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர்கள் அறிவித்துள்ளதால் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Rangalam ,Rameswaram , Fishermen fast at Gold Mine tomorrow; Strike in Rameswaram extends to 2nd day
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...