×

குற்றவாளிகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் பரிசு துப்பாக்கியுடன் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடவேண்டும்-ராணிப்பேட்டை எஸ்பி உத்தரவு

அரக்கோணம் :  ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணியில் துப்பாக்கியுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என எஸ்பி தீபாசத்யன் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சமீபத்தில் கொள்ளை, கொலை, திருட்டு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த 18ம்தேதி இரவு அரக்கோணம் அருகே நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த ஆடிட்டர் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்து பணியை அதிகரிக்கும்படி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் எஸ்பி தீபாசத்யன் தலைமையில் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் உட்பட 400 பேர் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை தீவிர இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பழைய குற்றவாளிகள் உள்ள இடங்கள், சந்தேகப்படும் இடங்கள், பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், தனிமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் துப்பாக்கிகளுடன் ரோந்து சென்றனர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி தீபாசத்யன் ‘தினகரன்’ நிருபரிடம் நேற்று கூறியதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரோந்து பணி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் கட்டுப்படுத்தப்படும். இதனால் பொதுமக்கள் அச்சமோ, பீதியோ கொள்ளவேண்டாம். தொடர்ந்து இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அனைவரும் துப்பாக்கி ஏந்தி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் சந்தேக நபர்களின் நடமாட்டங்கள், போலீசாரை தவிர வேறு யாராவது துப்பாக்கி வைத்திருந்தால் அவர்கள் குறித்த விவரங்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்தும், நீண்ட நாட்களாக சந்தேகப்படும்படி தங்கியிருக்கும் வெளிநபர்கள் குறித்த விவரங்கள் தெரியவந்தால் பொதுமக்கள் உடனே என்னையோ (எஸ்பி) அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக காக்கப்படும். மேலும் அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

துப்பாக்கியுடன் இரவு ரோந்து பணி: டிஜிபி உத்தரவு

திருச்சி மாவட்டம் நவல்பட்டு பகுதியில் கடந்த மாதம் ஆடு திருடியவர்களை பிடிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து செல்லவேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி பல்வேறு மாவட்டங்களில் போலீசார் துப்பாக்கியுடன் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் சரக டிஐஜி பாபு அறிவுறுத்தலின்பேரில் ராணிப்பேட்டை எஸ்பி தீபாசத்யன் மேற்பார்வையில் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட 18க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் பணியாற்றும் போலீசார் துப்பாக்கியுடன் இரவு நேர ரோந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Tags : SP , Arakkonam: The SP has asked the police to provide security with guns during night patrols in Ranipettai district
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்